சென்னை கந்தகோட்டம்_முருகன் வரலாறு

வள்ளலார் பாடிய சென்னை #கந்தகோட்டம்_முருகன் வரலாறு!
 
17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாறு இது.
ஒரு கோயிலில் உற்ஸவர் சிலை செய்ய வேண்டும் என்று நிர்வாகத்தினர் விரும்பினர். சிற்ப வல்லுனர்கள் மூலம்,பஞ்சலோகத் திருமேனி வார்க்கப்பட்டது.
 
வார்ப்படச் சூடு அடங்கும் முன், சிலையை வெளியே எடுக்கப்பட்டது. தகதகவெனப் பிரகாசித்தது சிலை, இருந்தாலும் அங்கும், இங்குமாக பிசிறுகள் நீட்டிக் கொண்டிருந்தன.
அவற்றை நீக்கி தூய்மை செய்யலாம் என்ற எண்ணத்தில், தலைமை சிற்பி வந்த போது, உடம் பெங்கும் தீப்பற்றியது போல எரிச்சல் பரவியது.வலியால் துடித்த அவர், மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பார்த்தவர்கள் பதறினர். முகத்தில் தண்ணீர் தெளிக்க சிற்பி கண் விழித்தார்.
 
அவர் எழுந்தாரே தவிர, கண்களில் இருந்த பயம் அப்படியே தெரிந்தது. கைகளைக் கூப்பி,
“பெரியோர்களே! இந்த சிலை சாதாரணமானது அல்ல! தெய்வ சான்னித்தியம் நிறைந்த இதை தொட பயமாக இருக்கிறது. மன்னியுங்கள்! பிசிறுகளைப் போக்கி, தூய்மைப்படுத்தும் சக்தி எனக்கு இல்லை” என்றார். “தலைமைச் சிற்பியே இப்படிச் சொல்கிறாரே” என நிர்வாகிகள் திகைத்தனர். அதன் பின், பிசிறுகளுடன் உள்ள சிலையை வைத்து திருவிழா நடத்தக் கூடாது எனக் கருதி, அதை அறையில் பூட்டிவைத்தனர்.
 
இரண்டு ஆண்டுக்குப் பின், வேதத்தில் கரை கண்ட பண்டிதர் ஸ்ரீசாம்பையர் காசியில் இருந்து வந்தார். மூலவரைத் தரிசித்த பின், உற்ஸவரையும் தரிசிக்க விரும்பினார்.அவரிடம் கோயில் பணியாளர்கள், உற்ஸவர் சிலை குறித்த ரகசியங்களை விவரித்தனர். ஆனால், சாம்பையரின் வற்புறுத்தலால் அறைக்கதவு திறக்கப்பட்டது.சிலையைக் கண்டு மெய்சிலிர்த்த பண்டிதர் நிர்வாகிகளிடம், “நீங்கள் அனைவரும் புண்ணியசாலிகள். இங்குள்ள மூலவர் அருள் பொழிவதில் முதல்வராக விளங்குகிறார். அதே சான்னித்தியம், உற்ஸவர் சிலையிலும் இருக்கிறது. அருளை அள்ளித் தரும் இந்த சிலையை, தியானிக்கலாமே தவிர, உளியால் செதுக்கக் கூடாது. ஆத்ம சக்தியால் நான் தூய்மை செய்கிறேன்” என்றார்.
 
சிலையை சுற்றிலும் திரையிட்டு, உள்புறம் அமர்ந்த பண்டிதர், மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்லச் சொல்ல, சிலையில் இருந்த பிசிறுகள் உதிர்ந்தன. சிலை முன்பை விடப் பளபளப்புடன் காட்சியளித்தது.
 
இதுவரையில் சென்னை கந்தகோட்டம் உற்ஸவர் முருகனை தரிசித்த நாம், இனி மூலவரையும் தரிசிக்கலாம் வாருங்கள்!
 
16ம் நூற்றாண்டுக்கு முந்திய வரலாறு இது. அந்நியர் படையெடுப்பால், திருப்போரூர் முருகன் கோயிலில் இருந்த மூலவர் சிலையை கல் திரையிட்டு மறைத்தனர்.
அச்சிலை நாளடைவில் மலையடிவாரத்தில் உள்ள வேப்ப மரத்தடி புற்றில் புதைந்நது. நாளடைவில், அமளி அடங்கிய பிறகு, வேறொரு சிலையை பிரதிஷ்டை செய்தனர்.
அங்கு மாரிச்செட்டியார், கந்தப்ப ஆசாரி என்னும் முருகபக்தர் இருவர், ஒவ்வொரு கார்த்திகையன்றும், சென்னையில் இருந்து நடந்து சென்று திருப்போரூர் முருகனைத்
தரிசிப்பது வழக்கம்.
 
1595 – மார்கழி 13 ம் நாள், வெள்ளிக்கிழமை, கார்த்திகையன்று வழக்கம் போல், முருகனை தரிசிக்க சென்றனர். சிலுசிலுப்பான காற்றில், ஒரு வேப்பமரத்தடியில் இருவரும் உறங்கினர். அங்கு தான் புற்றில் சிலை வடிவில் முருகன் மறைந்திருந்தார். இருவரும் உறங்கியபின், புற்றில் இருந்த சுவாமி, நாகப்பாம்பு வடிவில் தோன்றி மாரிச்செட்டியாரின் மார்பில் ஏறி, உடலெங்கும் விளையாடினார்.
 
அதன்பின், “பக்தா! அருகில் இருக்கும் புற்றில் நான் சிலை வடிவாக இருக்கிறேன். என்னைச் சென்னைக்குக் கொண்டு செல்” என்று கனவில் உத்தரவிட்டார்.அதே சமயத்தில் அதே கனவு கந்தப்பருக்கும் தோன்றியது. இருவருமாக எழுந்து, புற்றை விலக்க, சிலை இருக்க கண்டனர். “
 
“ஐயா! குமரய்யா! உன்னைச் சுமக்க எங்களால் முடியுமா? பத்து நாள் குழந்தை போல வந்தால் மட்டுமே, எங்களால் சுமந்து செல்ல முடியும்” என்று வேண்டினர்.
அப்படியே சுவாமியும் மாறிக் கொள்ள, மாரிச்செட்டியார் முதுகில் மூலவரைக் கட்டிக் கொண்டார். இருவரும் சென்னை நோக்கி நடக்கத் தொடங்கினர். வரும் வழியில் பக்கிங்ஹாம் கால்வாய் குறுக்கிட்டது.இடி, மின்னலுடன் மழை பெய்ய வெள்ளம் பெருக்கெடுத்தது. வேறு வழியின்றி, இருவரும் கால்வாய் வெள்ளத்தில் கால் வைத்ததும், பெரிய அலை தோன்றியது. இருவரும் அதில் அடித்துச் செல்லப்பட்டு கரை சேர்ந்தனர்.
 
மாரிச்செட்டியார் முதுகிலிருந்த மூலவரைக் கையால் தொட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.
பயணம் தொடர, மயிலாப்பூர் வந்தனர். அங்கு கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் இருந்த தென்னந்தோப்பில் இளைப் பாறினர். மேலாடையால் மூலவரை மூடி வைத்து விட்டு, இருவரும் தூங்கினர். சற்று நேரத்தில் சடைமுடி, காதில் குண்டலம், நெற்றியில் விபூதி, கழுத்தில் ருத்ராட்சம் கொண்ட திருமேனியுடன் கையில் பொற்பிரம்பு ஏந்திய வேதியர் ஒருவர், அவர்களை எழுப்பி, “என்ன இது? மெய் மறந்து இப்படி தூங்கலாமா? பொழுது புலரும் முன் கிளம்புங்கள்” என்று எச்சரித்தார்.
 
திடுக்கிட்டு விழித்த இருவரும் கண்டது கனவு என உணர்ந்தனர். உடனே மயிலாப்பூர் குளத்தில் நீராடி, இருப்பிடம் வந்தனர். தாங்கள் சுமந்து வந்த முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
 
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி, வள்ளலார் ராமலிங்கர், பாம்பன் சுவாமி போன்ற அருளாளர்களும் இந்த முருகனை வழிபட்டுள்ளனர்.
பிறந்து பத்துநாள் ஆன குழந்தை போல, அடியவருக்காக மாறிய இந்த அற்புதமுருகன் சென்னை கந்தகோட்டத்தில் அருள்புரிகிறார்.
வேத மந்திரத்தால் தூய்மை செய்யப்பட்ட உற்ஸவரையும் இங்கு தரிசித்து மகிழலாம்.
 
Sri Bava

Sri Bava

Leave a Replay