கந்தர் அனுபூதி

காப்பு

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

நூல்

ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
சாடுந் தனியா னைசகோ தரனே. 1

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே. 2

வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே. 3

வளைபட் டகைம் மாதொடு மக்களெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தை யரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோக தயா பரனே. 6

கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7

அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. 8

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே. 10

கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகா மணியே. 11

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. 12

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின் றதுவே. 13

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே. 14

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங் கவஎண் குணபஞ் சரனே. 15

பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
டோரா வினையே னுழலத் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோ கதுரந் தரனே. 16

யாமோ தியகல் வியுமெம் மறிவுந்
தாமே பெறவே லவர்தந் ததனாற்
பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீ ரினியே. 17

உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூர பயங் கரனே. 18

வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடி யென்றொரு பாவி வெளிப் படினே. 19

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்
உரிதா வுபதேச முணர்த் தியவா
விரிதா ரணவிக் ரமவே ளி மையோர்
புரிதா ரகநா கபுரந் தரனே. 20

கருதா மறவா நெறிகா ணஎனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா கரசூர விபாட ணனே. 21

காளைக் குமரே சனெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைக் குழல் வள்ளி பதம்புணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே. 22

அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமமேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூத ரனே 23

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ
சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும்
போர்வேல புரந்தர பூப தியே. 24

மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றியசே வகனே. 25

ஆதா ரமிலே னருளைப் பெறவே
நீதா னொருசற் றுநினைந் திலையே
வேதா கமஞா னவிநோ தமனோ
கீதா சுரலோ கசிகா மணியே. 26

மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலேறிய வானவனே. 27

ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே. 28

இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
பொல்லே னறியாமை பொறுத் திலையே
மல்லே புரிபன் னிருவா குவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே. 29

செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே. 30

பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே. 31

கலையே பதறிக் கதறிக் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையனே. 32

சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்று விடப் பெறுவேன்
மந்தா கினிதந்த வரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே. 33

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காம லெனக்கு வரந்தருவாய்
சங்க்ராம சிகா வலசண் முகனே
கங்கா நதி பால க்ருபாகரனே. 34

விதிகாணு முடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே. 35

நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே. 36

கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியொடு மகந் தையையே. 37

ஆதாளியை யொன் றறியே னையறத்
தீதாளியை யாண் டதுசெப் புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ்வே லவனே. 38

மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவேடணை யென்று முடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணருந்
தேவே சிவ சங்கர தேசிகனே. 39

வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
சுனையோ டருவித் துறையோடு பசுந்
தினையோ டிதணோடு திரிந் தவனே. 40

சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே. 41

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைக் தனிவேல் நிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையு மற்றதுவே. 42

தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யின்பின்
பேசா அநுபூதி பிறந் ததுவே. 43

சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே. 44

கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே. 45

எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே. 46

ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே. 47

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. 48

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. 49

மதிகெட்டறவா டிமயங் கியறக்
கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே. 50

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
கருவா யுயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவா யருள்வாய் குகனே. 51
—————————————————————–

Senthi

Senthi

Leave a Replay