கந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்

thiruparangundram

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத்துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப்பொருளே

வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே
ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ

பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ
விராலிமலையுறை விமலா நமோ நமோ
மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ

சூரசங் காரா துரையே நமோ நமோ
வீரவேலேந்தும் வேளே நமோ நமோ
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ
கண்களீராறுடை கந்தா நமோ நமோ

கோழிக்கொடியுடைக் கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சசச சசச ஓம் ரீம்
ரரர ரரர ரீம்ரீம்

வவவ வவவ ஆம் ஹோம்
ணணண ணணண வாம்ஹோம்
பபப பபப சாம் சூம்
வவவ வவவ கெளம் ஓம்

லல லிலி லுலு நாட்டிய அட்சரம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக

பக பக பக பரந்தாமா வருக
வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருக நிஷ்களங்கனே வருக
தாயென நின்னிருதாள் பணிந்தேன் எனைச்

சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினமும் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்லவிடங்கள் வாராமல் தடுத்து

நல்ல மனத்துடன் ஞானகுரு உனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்தி கேயா

நந்தன் மருகா நாரணி சேயே
என்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
தண்ணளி அளிக்கும் சாமிநாதா
சிவகிரி கயிலை திருப்பதி வேளூர்

தவக்கதிர்காமம் சார்திரு வேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு

சன்னதி யாய்வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக் (கு) அன்புடன் தமிழைச்
செகத்தொர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்

நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நின்ற மெய்ப்பொருளோனே
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி

பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரி அயன் அம்பிகை லட்சுமி
வாணி யுடனே வரைமாக் கலைகளும்

தானே நானென்று சண்முகமாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்
பூரண கிருபை புரிபவா போற்றி
பூதலத்துள்ள புண்ய தீர்த்தங்கள்

ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிஷ்டைகள் பலபல வெல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்

எள்ளினுள் எண்ணெய் போலெழிலுடை உன்னை
அல்லும் பகலும் ஆசாரத்துடன்
சல்லாப மாய் உனைத் தானுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி

பல்லா யிரநூல் பகர்ந்தருள்வாயே
செந்தில்நகர் உறை தெய்வானை வள்ளி
சந்ததம் மகிழும் தயாபர குகனே
சரணம் சரணம் சரஹணபவ ஓம்

அரன்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரஹணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

Picture of Senthi

Senthi

Leave a Replay