மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் மாநகருக்கு அண்மையில் உள்ள டொலார்ட் டெஸ் ஓமோ நகரின் (Dollard – Des Ormeaux) செயின்ட் ரெஜீஸ் வீதியில் (St Regis Blvd) அமைந்துள்ளது. இவ்வாலயம் இருபத்தைந்து வருடங்கள் பழைமை வாய்ந்ததும், கனடா வாழ் தமிழ் சைவ பக்தர்களின் வழிபாட்டிற்காக ஆரம்பிக்கப் பெற்ற முதல் மூன்று ஆலயங்களில் ஒன்றானதும் ஆகும்.
மொன்றியலில் வசித்து வந்த தமிழ் இந்து பக்தர்கள் 1985-ம் ஆண்டு முருகனுக்கென்று ஆலயம் உருவாக்கத் தீர்மானித்தனர். 1991 – 92-களில் நிதி திரட்டப்பட்டு கோயிலுக்கென்று ஒரு அமைவிடம் கிடைக்கப்பெற்று ஆகம விதிகளுக்கு அமைவாக சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ஆலயம் உருவாகியது. புதிய ஆலயத்தில் அருள் மிகு திருமுருகப்பெருமானுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நிகழ்த்தப் பெற்றது. திருமுருகன் வருடாந்த மஹோற்சவ விழா 05.08.2012 கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இவ்வாலயத்தின் பிரதான வாயிலில் 51 அடி உயரமான இராச கோபுரமும், கருவறையில் 32 அடி உயரமான விமானமும் அமையப்பெற்று மொன்றியால் நகரில் கம்பீரமாக தோற்றமளிக்கின்றது.
இவ் ஆலயத்தின் பரிவார மூர்த்திகளாக விநாயகர், சிவன், பார்வதி, வெஞ்கடேஸ்வரர், நடேசர், பைரவர் ஆகிய தெய்வங்களும்; நவகிரக தோஷ நிவர்த்தி செய்வோருக்காக நவக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளன.
விய வருடம் வைகாசித் திங்கள் நாள் (22-05.2006) திங்கட்கிழமை காலை கணபதி வழிபாட்டுடன் கிரியைகளை ஆரம்பித்து விய வருடம் வைகாசித் திங்கள் 15ம் நாள் (28-05-2006) ஞாயிற்றுக்கிழமை காலை 7-00 மணிக்கு இராஜ கோபுரத்துக்கும் முரகனின் கருவறையின் விமானத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று காலை 7-47 இல் இருந்து 8-50 வரையிலுள்ள மிதுன லக்கினம் கூடிய தெய்வீக முகூர்த்தத்தில் பெருஞ்சாந்தி வெகு சிறப்பாக நடைபெற்றது.