ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு காலத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களுடன் யூதரின் ஆலயங்களும், இஸ்லாமியர்களின் மசூதிகளும், பௌத்தர்களின் விகாரை ஒன்றும் தலைநிமிர்ந்து நின்றன. அவற்றோடு நகரின் முக்கிய பகுதியில் பெரியதொரு தெரு அருகில் சிறிய ஆலயமாக திகழ்கிறது மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம்.
‘மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது’ என்பது போல் சிறிய ஆலயமாயிருப்பினும் பெருமைகள் பல நிறைந்ததாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினரில் ஒன்பது பேரின் முதல் முயற்சியில் தோன்றிய இச்சிறு ஆலயம், இன்று இந்நகரத்து இந்துப் பெருமக்கள் அனைவரது பொதுச் சொத்தாக விளங்குகிறது. இந்து மக்களுக்கு மட்டுமன்றி, இந்து மதம் பற்றி அறிய விரும்பும் வேற்றுமத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இன்னும் ஆத்மீக தாகங்கொண்ட அனைத்து இனமக்களும் ஆலயத்திற்கு வருகை தருகிறார்கள். இவ்வாலயத்தில் நித்திய பூஜைகள், வழிபாடுகள் மற்றும் இந்துக்களின் எல்லா முக்கிய விசேஷ தினங்களும், பண்டிகைகளும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றன.
இலங்கையில் நல்லூர் கந்தசாமி கோயிலில் வருடாந்திர மஹோற்சவம் நடைபெறும் அதே நாட்களில் இங்கும் திருவிழா நடைபெற்று, தேர் திருவிழாவன்று இங்கும் முருகன் வெளிவீதி உலாவந்து அருள் பாலிப்பது வழக்கம். இவ்வாலயத்தில் கற்பூர தீபத்திற்குப் பதிலாக நெய் தீபமே காட்டப்படுகிறது. கற்பூரம் சிறிய பொருளாய் இருந்து பெரிய ஜோதியை தோற்றுவிக்கும் என்பதால் எரிந்தபின் மீதி ஏதும் இல்லாதிருப்பதால் ஆத்மீக இலக்கான ஜோதியுடன் கலக்கும் தத்துவத்தின் வெளிப்பாடாக கற்பூரம் எரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் இன்றைய சூழலுக்கேற்பவும், சுற்றுப்புறத்தை பாதுகாக்கவும் நெய் தீபமே ஏற்றப்படுகிறது. ஆலயத்தில் வாரம் தோறும் அன்னதானமும்,நம் வழிபாடு சிறக்க, நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் வாரம்தோறும் இங்குபோதிக்கப்படுகிறது. தியான வழிபாட்டிற்கு தயார்படுத்தும் ஆரம்ப பயிற்சிகள், இசை வழிபாடு, சொல் வழிபாடு, தியான வழிபாடு உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகின்றன. இப்பிராத்தனைகளில் பல சிறந்த ஆன்மீக இதயங்கள் ஈடுபட்டு கலந்து சிறப்பிக்கின்றனர்.