Radius: Off
Radius: km
Set radius for geolocation
பத்துமலைக் குகை முருகன் கோயில்

பத்துமலைக் குகை முருகன் கோயில்

மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன்,

இந்துக்களைப் போல் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும், மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாகிப் போய் விட்ட இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


ஒரு காலத்தில் ஒரு ஒற்றையடி பாதையாக சென்று மலையில் இருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்ப்பெற்று விளங்குகிறது பத்துமலை திருத்தலம். இறைவழிப்பாட்டிற்கு மட்டுமே இத்தலம் என்ற காலம் கடந்து இன்று மலேசியாவில் புகழ்ப்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது பத்துமலை.ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக தற்போது விளங்குகிறது.

சுற்றுப்பயணிகளிடையே பத்து கேவ்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் பத்துமலை, தைப்பூச திருநாளுக்கு புகழ்பெற்றது என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு தைப்பூசத் தினத்தன்றும் இந்த பத்துமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி முருகப் பெருமானை தரிசனம் செய்வார்கள்.சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இப்படியாக தைப்பூசத் திருநாளுக்கு பத்துமலை திருத்தலம் புகழ்ப்பெற்றது. நாட்டின் சுற்றுலா காலண்டரில் பத்துமை திருத்தலத்தின் தைப்பூசத் திருநாள் இடம்பெற்று நீண்ட  காலமாகிறது.

தல வரலாறு

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்கள் மலேசியாவில் கூலித்தொழிலாளர்களாக பணி செய்து வந்தனர். அப்போது தொழிலாளர் தலைவராக இருந்தவர் காயாரோகணம்பிள்ளை. இவரது முயற்சியால் கோலாலம்பூரில் 1873ல் மாரியம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. ஒருநாள் கனவில் தோன்றிய அம்பிகை,”” என் இளையமகன் முருகனுக்கு பத்துமலைக்குகையில் கோயில் கட்டு,” என்று உத்தரவிட்டாள். இதையடுத்து, காயாரோகணம் பிள்ளையின் மகனான தம்புசாமிப்பிள்ளையுடன் கந்தப்ப தேவர் என்பவர் இணைந்து காடாக அடர்ந்து கிடந்த பத்துமலையில் 1888ல் வேல் ஒன்றினை வைத்து வணங்கத் தொடங்கினார். இவ்விடம் வழிபாட்டுக்குரிய கோயிலாகி மக்கள் மத்தியில் புகழ்பெற்றது. பத்துமலை முருகன் கோயிலை அப்புறப்படுத்தும்படி கோலாலம்பூர் ஆட்சியாளர் ஜோஸ்துரை கட்டளையிட்டார். ஆனால், பக்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். 1920ல் கோயிலுக்குச் செல்வதற்கான படிகள் அமைக்கப்பட்டன. 1939ல் இருவழி சிமெண்ட்படிகளாக மாற்றப்பட்டது. இன்று மூன்று வழிகளைக் கொண்ட 272 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.                                                                                                                                                                                                                                               மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள். தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்திருக்கிறார். இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார். இந்த மூன்று                                                                                                                                                                                                                                                                                                                                                                       ஆலயங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது என்கிற வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

கோயில் அமைப்பு

கோயிலில் நுழைந்தவுடன் விநாயகப்பெருமான் அருள்பாலிக்கிறார். மீனாட்சி, சொக்கநாதர், வேலாயுதமூர்த்தி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய ஆறுபடை முருகன் சந்நிதிகள் உள்ளன. பிரதான சந்நிதியாக சுண்ணாம்புப்பாறைகளுக்கு நடுவில் உள்ள குகையில் முருகப்பெருமான் வள்ளிதெய்வானையுடன் வீற்றிருக்கிறார்.

இந்த முக்கியமான பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.
மிகப் பெரிய முருகன் சிலை

மனதாலும் நிறத்தாலும் பொன்வண்ணம் கொண்டவராக முருகப்பெருமான் பத்துமலையின் அடிவாரத்தில் பக்தர்களை வரவேற்கக் காத்து நிற்கிறார். இந்த சிலையின் உயரம் 42.7 மீ,  அதாவது 140.09 அடி. உலகளவில் இன்று பத்துமலையை அடையாளம் காட்டும் சின்னமாக இது அமைந்துள்ளது. 30 தமிழக சிற்பிகள் இதை வடிவமைத்தனர். இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. தாய்லாந்தில் இருந்து தயாரிக்கப்பட்ட விசேஷ பொன்நிறக்கலவை பூச்சால் முருகனின் மேனி மின்னுகிறது. 2006, ஜனவரி 29ல் திறந்து வைக்கப்பட்டது. உலகத்தையே தன்வசப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமான் அருட்பார்வை அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

கண்கவரும் கலைக்கூடம்: தமிழர்கலை பண்பாட்டினை வெளிப்படுத்தும் விதத்தில் கலைக்கூடம் ஒன்று 1971 முதல் செயல்பட்டு வருகிறது. கந்தபுராணம், விஷ்ணுபுராணம், ராமாயணம், மகாபாரதம் ஆகிய புராண, இதிகாச காட்சிகள் இங்கு இடம்பெற்றுள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கீதோபதேச காட்சி, விநாயகர், அவ்வை, சிதம்பரம் நடராஜர், ஆறுபடை வீடு முருகன் சிலைகள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கின்றன.

வள்ளுவர் கோட்டம்: தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்தவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். திருக்குறளின் அறம்,பொருள், இன்பம் ஆகிய முப்பால் பிரிவுகளும், 133 அதிகாரங்களும், 1330 குறள்களும் பளிங்குக்கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விளக்கங்களும், ஓவியங்களும், சுதைச் சிற்பங்களும் பிரமிக்க வைக்கின்றன. 1980ல் அமைக்கப்பட்ட இக்கோட்டத்தில், 5 அடி உயர வள்ளுவர் சிலையும் உள்ளது.

ராமாயணக் குகை: கம்பராமாயணத்தின் பெருமையை நிலைநாட்டும்வகையில், 1995ல் இங்கு ராமாயணக்குகை அமைக்கப்பட்டது. குகையின் முகப்பில் 60அடி உயர ஆஞ்சநேயரின் சிலை வரவேற்கிறது. பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரையிலான காட்சிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இயற்கையும் செயற்கையும்: பத்துமலையில் விநாயகர் சந்நிதி அருகில் குளம் ஒன்று அமைந்துள்ளது. மலைக்குகையில், பச்சை பசேல் என்று மரங்கள் உள்ளன. புறாக்களின் சரணாலயமாக இது திகழ்கிறது. படியேறிச் செல்லும் போது எதிர்ப்படும் குரங்குகள் பக்தர்களை மகிழ்விக்கின்றன. முடிகாணிக்கை செலுத்தும் இடங்கள், சைவ உணவு விடுதிகள், பூஜை பொருள் விற்கும் கடைகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் என்று எல்லா வசதிகளும் உண்டு. பத்துமலை பழமை மாறாமல் இயற்கை பொலிவோடும், அதேசமயத்தில் புதுமையின் சின்னமாகவும் அமைந்துள்ளது.

வேலை வணங்கினால் எல்லாம் கிடைக்கும் : வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்று வேலையும் மயிலையும் வழிபட்டால் வேல்முருகனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பர். இதனால் தான் பாட்டுக்கொரு புலவன் பாரதி, “”வெற்றி வாகையைசுமக்கும் வேலை வணங்குவதே வேலை,” என்று பாடினார்.””கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தை அரசாளும் பாக்கியம், குபேரனைப்போல செல்வவளம், இந்திரனையும் மிஞ்சிய சுகபோகவாழ்வு, பிறப்பற்ற நிலை, செந்தமிழில் புலமை, பகையை முறியடித்தல், காலனை வெல்லும் சக்தி, அஷ்டமாசித்தி ஆகியவற்றை பெற சுலபமான வழி முருகன் கையிலிருக்கும் வேலினையும், அவனது வாகனமாகிய மயிலினையும், அப்பெருமானின் பன்னிரு கண்ணழகையும் மனதால் நினைத்திருப்பது தான். வீணாகக் காலம் கழிப்பதை விட, முருகனின் வேலை வணங்கினால் எல்லா இன்பங்களும் கிடைக்கும். இத்தகவலை நமக்குத் தந்துள்ளவர் அருணகிரிநாதர்.

சிறப்பு விழாக்கள்

முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

தைப்பூசத் திருவிழா: முருகப்பெருமான் கோயில்கள் அனைத்திலும் தைப்பூசம் சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா 1891ம் ஆண்டு முதலே பத்துமலையில் நடத்தப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்நாளில் பத்துமலையில் கூடி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். தைப்பூசத்திற்கு முதல்நாள் 21அடி உயர வெள்ளி ரதத்தில் முருகப்பெருமான் எழுந்தருள்வார். இந்த தேர்பவனி கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலில் இருந்து பத்துமலை அடிவாரத்தை வந்தடையும். அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் உடன்வருவர். “முருகனுக்கு அரோகரா’ எங்கும் மக்கள் கோஷம் விண்ணைத் தொடும். தொடக்க காலத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே நடைபெற்ற இவ்விழா, ஒருவாரகாலம் தொடர்ந்து நடக்கிறது.

பால்குடம் காவடி: பழங்காலத்தில் மலைமேல் இருக்கும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு பால், பன்னீர், சந்தனம் என்று பல்வேறு திரவியங்களைப் பக்தர்கள் காவடியில் எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வழக்கமே காவடி வழிபாடாக பின்னாளில் மாறிவிட்டது. காவடியைச் சுமந்து வரும் பக்தர்கள் காவடியோடு தங்கள் மனச்சுமையையும் முருகப்பெருமானிடம் இறக்கி வைத்து நிம்மதி பெறுகின்றனர்.
{jathumbnail off}
பயண வசதிகள்

மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பத்துகுகை அல்லது பத்துமலைக் குகை எனும் இந்தப் பகுதி அந்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால் பயண வசதி சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.

Address

Address:

Kawasan Perusahaan Ringan Batu Caves, Selangor, 68100 Batu Caves, Malaysia

GPS:

3.2378844, 101.6840385

Telephone:
Email:

-

Plan My Route

Leave a Review

Only registered users can add a review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *