Radius: Off
Radius: km
Set radius for geolocation
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம்

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம்

செல்வச் சந்நிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். இக்கோயில் ஆற்றங்கரையான், சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என்று பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வருகிறது.

அமைப்பு

சந்நிதியின் தோற்றம், அமைப்பு, வழிபாட்ட முறை எல்லாம் சற்று வித்தியாசமானவை. இங்கு வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இங்கு இல்லை. ஆலய முற்றில் நந்தியும் சுற்றிவரவுள்ள அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் சந்நிதிக்கு மெருகூட்டுவதாக உள்ளன. ஆலயத்தின் எத்திசையிலிருந்து பார்த்தாலும் முருகனையும் அங்கு காட்டப்படும் தீபாராதனையையும் தான் பார்க்க முடியும். முருகனின் கையிலுள்ள வேலையே வைத்து இங்கு வழிபடும் முறை தொன்றுதொட்டு காலங்காலமாக நடைபெறுகின்றது. இவ்வாலயத்தில் முருகப்பெருமான் வேல்வடிவத்திலே மூலமூர்த்தியாக காட்சி கொடுக்கின்றார். திருவிழாக் காலங்களிலும் வேல் உருவிலேயே எழுந்தருளி காட்சி கொடுக்கின்றார். இவ்வேலில் சிகண்டி முனிவர் தன்னைத்தாக்க வந்த யானைக்கு வெற்றிலையை கிள்ளி விசிய போது அது வேலாக மாறி யானையைத் தாக்கியதை எடுத்துக் காட்டுமுகமாக வெற்றிலையின் நுனி பதிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம்.

கதிர்காமத்தைப் போல் வாய்கட்டி பூஜை செய்யும் முறையே இவ்வாலயத்திலும் காணப்படுகின்றது.
வரலாறு

வித்தியாசமான அமைப்பைக் கொண்ட இவ்வாலயம் வரலாற்று புகழ் மிக்கது. முன்பு வீரபாகுதேவர் சூரபத்மனிடம் தூது சென்ற போது தனது காலடியைக் கல்லோடை என்ற இடத்தில் பதித்துச் சென்றதாகவும் பின்பு திரும்பும் வேளை சந்திக்கால பூஜை செய்யவேண்டியிருந்ததால் வல்லி ஆற்றங்கரையில் பூவரச மரநிழலில் வேல் ஒன்றை வைத்து சந்திக்கால பூஜை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த இடத்தில் சித்தர்கள், முனிவர்கள், யோகிகள் தவம் செய்து முத்தியடைந்தார்களாம். செல்வச்சந்நிதி ஆலயத்தின் தவ விருட்ஷமாக பூவரச மரம் அமைந்துள்ளது. முருகப்பெருமானும் கதிர்காமருக்கு முதலில் காட்சி கொடுத்தது பூவரச மரத்தின் கீழேயே என்று கூறப்படுகிறது. 65 ஆலமர இலையில் முருகனுக்கு பிரசாதம் படைத்து பின்பு பக்த கோடிகளுக்கு இன்றும் வழங்கப்படும் முறை இருக்கின்றது.

12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் குலோத்துங்கன் என்ற சோழ அரசனின் ஆட்சியில் கருணாகரத் தொண்டமான் என்ற சிற்றரசனால் வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டமானாறு கட்டப்பட்டது. தொண்டமானால் வெட்டப்பட்ட தொண்டமானாறு வல்லி நதியுடன் இணைந்த பகுதியாகும். இந்த வல்லி நதியின் தொடுவாயிலையே கருணாகரத் தொண்டமான் வெட்டி ஆழப்படுத்தி கடலுடன் இணைத்ததால் அது தொண்டமானாறு என்று அழைக்கப்படுகிறது.

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயராலும் அதன் பின்பு ஒல்லாந்தராலும் அழிக்கப்பட்ட ஆலயம் ஒல்லாந்தர்கால பிற்பகுதியில் மருதர் கதிர்காமர் என்ற பக்தரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சந்நிதி முருகன் தன்மீது அளவு கடந்த பக்தி கொண்டு தன்னை வழிபடும் மருதர் கதிர்காமர் என்பவரிடம் தனக்கு பூஜை செய்யும் உரிமையைக் கொடுக்க விரும்பினார்.

தொண்டமனாறு ஆற்றங்கரையிலே மீன் பிடித்து தனது காலத்தைக் கடத்தி வந்தார் மருதர் கதிர்காமர் இவர் வழமைபோல் அன்றும் ஆற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு குரல் ‘கதிர்காமா இக்கரைக்கு வா” என்றது. ஆச்சரியத்துடன் கரைக்குச் சென்ற கதிர்காமரிடம் சந்நிதிமுருகன் ஒரு சிறுவனாகக் காட்சி கொடுத்தார். அந்தச் சிறுவன் கதிர்காமரை நோக்கி ‘இந்த தொண்டைமான் ஆற்றங்கரையிலே இருக்கின்ற பூவரச மரத்தடியில் எனக்கு ஒரு ஆலயம் அமைத்த வழிபடுக” என்று பணித்தான். உடனே கதிர்காமர் நானோ கடற்தொழில் செய்பவன். எனக்கு பூஜை முறைகள் தெரியாது என்று பணிவுடன் கூற, சிறுவன் கதிர்காமாரை கண்ணை மூடுமாறு பணித்து கதிர்காமம் அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் பூஜை முறைகளை காண்பித்து, வழிபாட்டுக்கு ஒரு வேல் ஒன்றையும் வழங்கியதாக நூல்கள் கூறுகின்றன. அன்று தொடக்கம் முருக ஆசாரசீலராகிய கதிர்காமர் தொண்டைமனாற்றங்கரையிலே செழிப்புற்று வளர்ந்துள்ள பூவரச மரத்தடியில் வேலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். பூஜை முடிந்தபின்பு திருநீற்றை கொடுக்கும் முறை தெரியாமல் கதிர்காமர் தடுமாறியபோது, கதிர்காமா நீ திருநீற்றை எடு நான் போடுகிறேன், என்று அசரீரி வாக்கு கேட்டதாகக் கூறப்படுகின்றது. அன்று முதல் தட்டில் இருந்து திருநீற்றை எடுப்பது கதிர்காமராகவும் அதைப்போடுபவர் சந்நிதி முருகனாகவும் பக்தர்கள் கருதி அவரின் காலில் விழுந்து வணங்கி திருநீற்றைப் பெறுகின்றார்கள். காலில் விழுந்து திருநீற்றைப் பெறும்பொழுது தலையிலும் திருநீறு இடப்படும். இக்காட்சியைக் கண்டு பக்தர்கள் பெரிதும் பரவசம் அடைவார்கள்.

பூஜை முடிந்ததும் சந்நிதி முருகப்பெருமானும், கதிர்காமரும் ஆலய முன்பாக உள்ள திண்ணையில் இருந்து இன்றும் கதைப்பதாகக் கூறப்படுகின்றது.
அன்னதானக்கந்தன்

இவ்வாறு பூஜை செய்து வந்த தொண்டமனாறு கதிர்காமர் மனதில் ஒரு வருத்தம் தென்பட்டது. சந்நிதி முருகனுக்கு நைவேத்தியம் படைக்க தெரியாதே என்று, அப்படியிருக்கையில் ஒரு நாள் முதியவர் ஒருவர் கதிர்காமரை நோக்கி, நான் களைப்பாக இருக்கின்றேன். எனக்கு ஒரு ஆலம் இலையில் கொஞ்சம் பச்சரிசிப் பொங்கலும் பயற்றங்கறியும் வைத்துத் தந்தால் போதும் என்றார். பூரிப்பு அடைந்த கதிர்காமர் விரைவாக பொங்கல் பொங்கி, பயற்றங்காய் குழம்பையும் ஊற்றி ஆலம் இலையில் கொடுக்க, முதியவர் அற்புதமான பொங்கல் என்று பெருமிதமடைந்து கொண்டே அங்கே அறுபத்துமூன்று பேர் இருக்கிறார்கள் அவர்களும் உனக்கும் சேர்த்து அறுபத்தைந்து ஆலம் இலைகளில் அமுது தரவேண்டும் என்று சொல்லி முருகனாக காட்சி கொடுத்தார். கதிர்காமர் சந்நிதியை நோக்கி ஓடினார். ‘வேல்” வழமைக்கு மாறாக பிரகாசித்துக் கொண்டிருந்தது. சந்நிதி முருகன் ஆலம் இலையில் வைக்கப்பட்ட பச்சரிசிப் பொங்கலும் பயற்றங்காய் குழம்பும் உண்டதாக வரவாறு சான்றுபகர்கிறது. இதனால் தான் இன்றும் செல்லச்சந்நிதியில் பூஜை நேரங்களின் போது அறுபத்தைந்து ஆலம் இலைகளில் அமுது படைக்கும் மரபு காணப்படுகிறது.

இந்த ஆலயத்துக்கான தேர்வடம் கூட கடலிலேயே வந்து சேர்ந்த அற்புதம் இன்று அடியார்களின் மனதிலே ஆழப்பதிந்த ஒரு அதிசயம். தமது நல்ல காரியங்களைக் கூட இங்கேயே தொடங்குகின்றனர். இவ்வளவு பெருமை பொருந்திய செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு இந்த மஷோற்சவத்தின் போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடுவர். இலங்கையில் அநேக அன்னதான மடங்களைக் கொண்ட ஆலயம் சந்நிதி முருகன் ஆலயம்தான் இதனால் தான் சந்நிதி முருகனை, அன்னதானக் கந்தன் என்று அழைப்பார்கள். சந்நிதியான் ஆச்சிரமம் ஒவ்வொரு வருடமும் அன்னதானப் பணியைச் சிறப்பாகச் செய்கின்றது. கடந்த காலங்களில ஏற்பட்ட போர்சூழலால் அநேகமான அன்னதான மடங்கள் சேதமடைந்துள்ளன.

திருவிழா

அன்னதானக்கந்தன் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு ஆவணி மாதத்தில் வரும் பூரணையில் தீர்த்த உற்சவம் ஆண்டு தோறும் நடைபெறும். கோவில் கிணற்றுக்கு அருகே வள்ளிக்கொடி முளைக்கும் பொழுது கொடியேறி திருவிழா ஆரம்பமாகி பதினைந்து நாட்கள் நடைபெறும். தேர்த்திருவிழாவின் போது சந்நிதி முருகனுக்கு முன்பாக காவடி, கரகாட்டம், பாற்காவடி, கற்பூரச்சட்டி, தூக்குக் காவடி என்றும், தேரின் பின்னால் அ
ங்கப்பிரதட்சணை செய்யும் அடியார்கள், இவற்றின் பின்னால் வரும் பஜனைக் குழுக்கள், உருக்கொண்டு தன்னை மறந்து ஆடும் பக்தர்களின் காட்சிகள் இவை எல்லாம் மனதை உருக வைத்துவிடும்.
பூஜைகள்

இக்கோவிலில் பூஜைகளும் கிரியைகளும் வேதாகம முறைப்படி நடப்பதில்லை. பூஜைகள் தனித்துவமான சைவ ஆசாரமுறையில் நடைபெறுகின்றன. பூஜையின் போது மந்திரங்கள் சொல்லப்படுவதில்லை. முருகனுக்கு நிவேதனமாக 65 ஆலம் இலைகளில் பச்சைஅரிசிப்பொங்கல் பயற்றங்கறியுடன் படைப்பார்கள். திருவிழாக்காலங்களில் பூக்காரரின் தொண்டு மகத்தானது. இப்பூக்காரர்கள் மருதர் கதிர்காமரின் பரம்பரையில் வந்த தெண்டர்களே. ஊற்சவத்தின் போது சுவாமியை மலர்மாலைகளால் அலங்காரம் செய்வதும் இத்தொண்டர்களே. இவர்கள் இத்திருவிழாக்காலங்களில் விரதமிருந்து ஆசாரசீலராக சந்நிதியானுக்கு சகல தொண்டுகளும் செய்வார்கள். ஆலயத்தில் கொடுக்கப்படும் உணவுகளை விட வேறெந்த உணவுகளையும் திருவிழாக்காலங்களில் உண்ணமாட்டார்கள்.

ஆலயமணி

செல்வச் சந்நிதி ஆலயமணியின் கோபுரம் 54 அடி உயரமுள்ளது. சந்நிதியானின் ஆலய கண்டாமணிதான் உலகிலுள்ள இந்து ஆலயங்களில் அதிக உயர் கோபுரத்தில் அமைந்ததாக் கூறப்படுகின்றது. இதைச்செய்து கொடுத்தவர் மானிப்பாய் அதிகார் செல்லமுத்துவின் மகனான சோமசுந்தரம். இந்த மணியின் நாதஓசை தொண்டமானாறு சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து மானிப்பாய்க்கு கேட்குமாம். யுத்த சூழலால் 1986 ஆம் ஆண்டு கோபுரத்தில் எறிகணைபட்டு கோபுரமும் மணியும் சேதமடைந்தன. மீண்டும் சிலகாலம் சென்ற பின்பு வெளிநாடுகளில் உள்ள அன்பர்களின் விடா முயற்சியால் லண்டனில் மாமணி செய்யப்பட்டு 2002 ஆம் ஆண்டு ஆவணி மாதம் சந்நிதியான் ஆலயத்தில் மீண்டும் பொருத்தப்பட்டது. இந்த புதிய மாமணியின் எடை 1250 கிலோ கிராம் என்று கூறப்படுகின்றது.{jathumbnail off}
சித்திரத்தேர்

பல சிறப்புக்களைக் கொண்ட செல்வச் சந்நிதி முருகனின் அழகிய பெரிய தோற்றத்தைக் கொண்ட சித்திரத் தேர் 1986 ஆம் ஆண்டு போரில் அழிவுற்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

மேலதிக படங்கள் : கானாபிரபா

Address

Address:

Selvachchannithy Temple, Thondamanaru

GPS:

9.8124564, 80.13143100000002

Telephone:
Email:

-

Plan My Route

Leave a Review

Only registered users can add a review

Comments (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *