கதிர்காமம்

Kataragama temple

முகவரி & தொடர்பு


Address

Main Office Ruhunu Maha Kataragama Dewalaya, Kataragama 91400, Sri Lanka

GPS

6.4184918, 81.3332851

Telephone


திறந்திருக்கும் நேரம்

தகவல் இற்றைப்படுத்தல்


தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..

கதிர்காமம் இலங்கையில் மிக விசேடமான இடம். உலகின் நானாபக்கங்களிலிருந்தும் – முக்கியமாக இலங்கை – இந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கும் புனித தலம். இலங்கையிலே கதிர்காமம் ஓர் புனிதஸ்தலம். அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காமயாத்திரை என்பர் மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது. கோயில் சிறிது ஆனால் மகிமை பெரிது .

வானளாவிய கோபுரங்களையும் கலைக்கூடங்களையும் இக்கோயில் கொண்டதல்ல. சாதாரண செங்கட்டிக் கோயில் 50 அடி நீளம் கொண்ட ஓட்டுக்கூரை 20 அடி அகலம், 15 அடி உயரம் மூன்று மண்டபங்கள் போன்ற அறைகள். தெற்கு நோக்கிய பெரிய மண்டபத்தில் பக்தர்கள் நின்று வழிபடுவர் தென் திசை நோக்கிய கோயில். கோயில் மூலஸ்தானத்திற்கு மேல்ஸ்தூபியோ, கலசமோ ‘பிரமிட்’ போன்ற அமைப்போ, சிகரமோ கிடையாது.கூரைமுகட்டில் செம்பால் செய்த இரு குவளைகள் உள்ளன. சுவர்களில் தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே நிகழ்ந்த யுத்தக்காட்சிகள் பலவித ரூபங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மத்திய அறையின் மேற்பாகம் சித்திரத்திரையினால் மூடப்பட்டுள்ளது. ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகஸ்யமான பவித்திரமான இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி, அருவமும் உருவமுமாகி, அநாதியாய், ஒன்றாய், பலவாய், பிரம்மமாய் நின்ற சோதி, பிளம்பதோர் மேனியாகி, மருவுகதிர்காமப் பெருமாளாக யந்திரத்தில் ஆவாகனம் செய்யப்பட்டு மூலஸ்தானத்திலிருந்து பக்தகோடிகளை ரட்சிக்கிறான். யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது.

பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த மகோற்சவத்தின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.

முக்கால் ஏக்கரர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காம கந்தனின் அண்ணை கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் அழகும் பொலிவுங் கொண்ட அரசமரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெய்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில், இக்கோயிலுக்கு இட்டுச்செல்லும் வழி 300 யார் நீளமும் 20 யார் அகலமும் உடையது.                                                                                                          கோயிலுக்கு முன்னால் உள்ள பாதையின் இருமருங்கிலும் சுமார் 15 மண் குடிசைகள் உள்ளன. இவற்றில் சில ஓட்டுக்கூரையுடையவை திருவிழாக் காலங்களில் மண்குடிசைகள் சில்லறை வியாபார ஸ்தலங்களாகிவிடும். கோயிலுக்கு முன்னால் ஒரு ஏக்கரர் விஸ்தீரணமுள்ள சதுரமைதானமுண்டு இப்பகுதியில் சுமார் கால் ஏக்கர் பகுதியில் அழகான செம்மையான செட்டிமார் மடம் செங்கட்டியால் கட்டின சுவருடன் உண்டு.

ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தனின் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புணர்ந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது…. கதிர்காம கந்தனின் தமிழ் சமஸ்கிருத மொழிகளில் பல திருநாமங்கள் உள்ளன. அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும்….. வருடாந்த மகோற்சவம் தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வானசாஸ்திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பூசையில் வைக்கப்பட்;ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்”

“கந்த”, “கலியுக வரத” என வழங்கும் சகாப்தம் அக்கிரமம் புரிந்த அசுரரை தேவசேனாதிபதி கந்தவேள் சங்காரம் செய்ததிலிருந்தே கலியுகம் பிறந்தது. பௌத்த வருடமும் கீறீஸ்து வருடமும் எப்படி புத்தரும் இயேசுவும் தத்தம் மதங்களை ஸ்தாபித்ததிலிருந்து எழுந்தவையோ அதேபோல் கலியுகமும் கந்தவேளின் வெற்றியை குறிப்பதாகும்.

தமிழ் பஞ்சாங்கம் இவ்வருடமாகிய ரௌத்திரியை கலியுகத்தில் 5082 வருடமென்கிறது. ஆதலால் கந்தனின் வெற்றி 5082 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. வானசாஸ்திரப்படியே பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடப்பிறப்பும் இராசி சக்கரத்தில் கூறப்பட்ட ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு கிரகங்கள் மாறும் பொழுது நிகழ்கிறது.

கந்தப்பிரானைப் பற்றிய திருப்பாடல்கள், தோத்திரங்கள், கீர்த்தனங்கள் எல்லாம், “இவனே தமிழ்! இவனே தமிழ்தந்ததெய்வம்! இவனே தமிழின் சுவை! இவனே முத்தமிழ்ப் புரவலன்! சங்கத் தமிழின் தலைமைப் புதல்வன்! முத்தமிழால் செந்தமிழ் நு}ல்வரித்தோன்! வைதாரையும் வாழவைப்போன்! என்று துதி பாடுகின்றன. தமிழ்;மொழி இன்றும் நிலைத்திருப்பதின் காரணம் கந்தனின் வெற்றியே என்று இத்தீவில் இன்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

கப்புறாளை: கதிர்காமத்தில் வாயைக்கட்டி பூசை செய்கின்றனர். கதிர்காமத்தில் கப்புறாளை வாயைக்கட்டி பூசை செய்கின்றனர்.

ஆதிகாலத்தில் இலங்கையும் தென்பாரதமும் ஒன்றாயிருந்தபொழுது – அதாவது கொடுங்கடல் கோளினால் இலங்கை தனிப்பட்ட தீவாகும் வரை – இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து, ஏன் வடமேற்கு எல்லையிருந்துங் கூட முருகபக்தர்கள் கந்தனை வழிபடுவதற்கு கதிர்காமத்திற்கு வந்திருக்கிறார்கள். கடற்பிரிவு ஏற்பட்டபின் கடல்கடந்து யாத்திரை செய்ய முடியாதவர்கள் திருச்செந்தூரில் கந்த வழிபாடு செய்தனர். பிராமண குலத்தினர் கடல்கடந்து யாத்திரை செய்தால் அவர்கள் தூய்மையற்று விடுவார்களென்று சாஸ்திர விதியுண்டு. இதன் காரணமாக திருச்செந்தூர் பரபலமடைந்து காட்டின் மத்தியில் உள்ள கதிர் காமம் கைவிடப்பட்டது.

ஆதாரம்: கதிர்காமம் கந்தன் கோவில் – எழுதியவர்  : செ. சுந்தரலிங்கம்

இன்று கதிர்காமம் ஆலயம் முற்றுமுழுதாக சிங்களவர் கையில் உள்ளது. ஆலயத்தின் பெயரும் ருஹுனு மஹா கதரகம  தேவாலய என்று மாற்றப்பட்டுள்ளது.

Leave a review

Your email address will not be published. Required fields are marked *