உலக முடிவு எப்போது ??? – பகுதி – 3

** மஹா கைலாயம் எங்குள்ளது ? இமய மலையிலா ???
** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது?
** லலிதா சஹஸ்ர நாமத்தின் உண்மை பொருள் என்ன??
** சிவலிங்கத்தின் உண்மை விளக்கம் என்ன ?
** சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும்..

(உலக முடிவு எப்போது?? – பகுதி – (1 & 2 ) என்ற முன்னைய பகுதிகளை படிக்க முன் இந்த பகுதியை கண்டிப்பாக படிக்க வேண்டாம்….

சைவம் கூறும் பஞ்ச-பிரளயங்களில் (உலக முடிவு) ஏனைய பிரளயங்களை பற்றி இங்கு பார்ப்போம்.

3. அவாந்தர பிரளயம்;

நாம் வசிக்கும் பூமி உள்ளிட்ட பால்வீதி அண்டத்தொகுதிகள் யாவும் பூலோகம் என்று பார்த்தோம். இதற்கு மேலே 7 உலகத் தொகுதிகள் உள்ளன. இவற்றின் வரிசை பின்வருமாறு:

1. பூலோகம்

2. புவர் லோகம் ;இது எமது பால் வீதிக்கு அடுத்ததாக 2.5 மில்லியன் ஒளி வருட தூரத்துக்கு அப்பால் உள்ள அன்ட்றோமீடா அண்டத்தொகுதியாக இருக்கலாம். (Andromeda galaxy is 2.5 million light years away from our earth. This galaxy itself is so large and the light takes 150,000 years to traverses through this galaxy).

3. சுவர் லோகம் – இதைத்தான் சுவர்க்க லோகம் என்று மதங்கள் கூறுகின்றன.
4. மஹர் லோகம்
5. ஜன லோகம் -இங்குதான் எமது பித்ருக்கள் உறைகின்றார்கள்.
6.தப லோகம்
7.சத்திய லோகம் – இங்கு பிரம்மா தனது பத்தினிகளாகிய காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி ஆகியோருடன் உறைகின்றார்.

இந்த உலகங்களின் குறிப்பை காயத்திரி மந்திரத்திலும் காணலாம்.
இதற்கும் மேலே விஷ்ணு லோகம் உள்ளது. இதை வைகுந்தம் என்பர். இதற்கும் மேலே உள்ளது சிவலோகம்.

இதேபோல கீழ் உலகங்கள் அதளம் முதல் பாதாளம் ஈறாக 7 உள்ளன. இவையாவன

1. அதலம்
2. விதலம்
3. சுதலம்
4. தலாதலம்
5. ரசாதலம்
6. மகாதலம்
7. பாதாளம்

இதனால்தான் ஒருவருடைய வீழ்ச்சியைக் குறிப்பிடும்பொழுது அதல பாதாளத்தில் விழுந்து விட்டார் என்று கூறும் வழமை உள்ளது.
இவ்வாறாக மேல் உலகங்கள் 7, கீழ் உலகங்கள் 7 என்று எல்லாமாக 14 உலகத்தொகுதிகள் எமது பூலோகத்துக்கு அயல் உலகங்களாக உள்ளன.

இவற்றையே “புவனம் பதினான்கையும் பூத்தவளே” என்று அபிராமி அந்தாதியும் “நின் கிங்கிணி ஓசை பதினான்குலகமும் கேட்டதுவே” என்றுகந்தரலங்காரமும் கூறுவதும் இந்தப் 14 உலகத் தொகுதிகளையே. இவற்றுள் எமது அண்டவியல் விஞ்ஞான அறிவு ஆராய்ச்சிகளுக்கு உட்படுவது பூலோகம் என்னும் பால்வீதி அண்டத்தொகுதியாகும்.

இதன் படங்களைப் பார்த்தால் ஒரு பாய்ச்சுருள் போல் இருக்கும். இதையே பாய்ச்சுருளான அண்டத்தொகுதி என்று பாகவத புராணம் கூறுகின்றது.

இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் அப்பால் இன்னமும் பல அண்டத்தொகுதிகள் உள்ளன. இவற்றில் 6 பேரண்டங்களை உள்ளடக்கிய அண்டத்தொகுதியைப் பிரம்மாண்டம் என்று கூறுவர். மானுட சிந்தனைக்கும் ,கற்பனைக்கும் எட்டக்கூடிய அதிகூடிய அண்டப்பரிமாணம் இதுதான்.

இந்த 6 அண்டத்தொகுதிகளுக்கு அப்பாலும் எட்டு திக்குகளிலும், மற்றும் மேல் கீழாகவும் திசை ஒவ்வொன்றுக்கும் பத்து பத்தாக 100 அண்டத்தொகுதிகள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் உச்சியில் பத்திரகாளி புவனமும், வீரபத்திர புவனமும் உள்ளன. ஆக மொத்தமாக 108 புவனங்கள் ஒன்றாக நிவிருத்தி கலா புவனங்களாக உள்ளன. நாம் 108 நாமங்கள் சொல்லி வழிபடுவது எமது அயற்புவனங்களான இந்த 108 புவனங்களில் உள்ள அனைத்து உயிர்களின் க்ஷேமத்துக்காகவே. இந்த நூற்றெட்டு புவனங்களுக்கு அப்பாலும் பிரதிட்டாகலை புவனங்கள் என்று 56 அண்டத்தொகுதிகள் உள்ளன.

முன்னர் சொன்ன 108 புவனங்களுடன் இந்த 56 புவனங்களுமாக உள்ள 164 புவனங்களும், அவற்றைப் படைத்துக் காத்து அழிக்கும் திரிமூர்த்திகளாகிய பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களும் பல்லாயிரம் கோடி வருடங்களினூடாக இவற்றுக்கு அப்பாற்பட்டுள்ள வித்தியா தத்துவ புவனங்களில் வதியும் ஸ்ரீகண்ட ருத்திரரிடம் ஒடுங்குவது அவாந்தரப் பிரளயம் ஆகும்..

இங்கு கூறப்படுகின்ற பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்கள் இவ்வுலகங்களில் உள்ள மற்றைய உயிர்களைப்போல முக்குண தோஷங்களுக்குட்பட்டவர்களே. இவர்களை குணிப் பிரம்மா, குணி விஷ்ணு, குணி உருத்திரன் என்று சைவம் கூறுகின்றது.

4. மத்திம பிரளயம்;

ஸ்ரீகண்ட ருத்திரரும் அவர் உள்ளிட்ட ஏனைய உயிர்களும் வதியும் குணதத்துவ புவனம் உள்ளிட்ட 27 வித்தியா கலை புவனங்களும் பல்லாயிரக்கணக்கான கோடி வருடங்களினூடாக சுத்த வித்தியா தத்துவ புவனங்களில் வதியும் அனந்தேசுவரர் என்னும் சிவனிடம் ஒடுங்குகின்றன. இது மத்திம பிரளயம் ஆகும்.

5. மகா பிரளயம் அல்லது மகா சங்காரம்;

மேற் சொன்ன அனந்தேசுவரர் உள்ளிட்ட உயிர்கள் வதியும் 33 சுத்த வித்தை புவனங்களையும் ஒடுக்குவது இந்த புவனங்களுக்கும் தத்துவங்களுக்கும் அப்பாலாய் நிற்கும் பரப்பிரம்மமாகிய பரசிவன் ஆவார். இது மகாப் பிரளயம் அல்லது பேரூழிக்காலம் எனப்படும். இவரது சக்தியே பராசக்தி.. இவரது நவந்தரு பேதமென்னும் 9 வடிவங்களில் ஒரு பேதமே மகாவிஷ்ணு.

“ நவம்தரு பேதம் தன்னில் ஏக நாதனே நடிப்பன் ” – சிவஞான சித்தியார்

இந்த மகாசிவனே பஞ்ச கிருத்தியம் என்னும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் தொழில்களுக்குரிய சதாசிவர். இவரே சத் சித் ஆனந்த சொரூபியாகிய நடன சிவன் என்னும்நடராசர். இவரது திருமேனியே சிவலிங்கத் திருமேனி ஆகும்.

ஓம் ஸ்ரீ தத்துவாசனாயை நமஹா என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் கூறுவது இவ்வாறு 224 அண்டத்தொகுதிகளுக்கும் மூலமான 36 தத்துவங்களையும் ஆசனமாக அல்லது தளமாகக்கொண்டு இருக்கும் இந்த பராசத்தியையே. இந்த தத்துவ உலகங்களுக்கு அப்பாற்பட்டு மஹாகைலாசம் இங்கு உள்ளது. அந்த மஹா கைலாசத்தில் நிலைகொண்டுள்ள சக்தியையே மஹாகைலாச நிலயாயை நமஹா என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் கூறுகின்றது.

அம்மையப்பராகிய இறை அமரும் கைலாசம் இதுவே. நமது பூலோக கைலாசம் இதன் ஒரு சின்னமே ஆகும். இங்கு கூறப்பட்ட 224 அண்டத்தொகுதிகளும் எமது புவி சார்ந்த கோடிக்கணக்கான அண்டத்தொகுதிகளில் ஒன்றினது விவரணமேயாகும்.

இவ்வளவு காலமும் இறையின் பஞ்ச கிருத்தியங்களுக்கு காரணமாக இருந்த சக்தியும் மகாசங்காரத்தின் முடிவில் சிவத்தில் ஒடுங்கும். அப்போது சிவன் ஆடுவது சங்கார தாண்டவம். சிவனுடைய எல்லா தாண்டவங்களிலும் அருகில் இருக்கும் சக்தி இந்த சங்கார தாண்டவத்தில் இருப்பதில்லை. ஏனெனில் சங்கார காலத்தில் எல்லா உயிர்களும் மாயையில் ஒடுங்க, மாயை சக்தியில் ஒடுங்க, சக்தியும் சிவத்தில் ஒடுங்கும்.

அப்போது உலகின் இருமை வயப்பட்ட உந்தல்கள் எல்லாம் ஒடுங்கி ஒன்றாகும். இதையே அண்டவியல் விஞ்ஞானம் ஒருமைப்புள்ளி (point of singularity)என்று கூறுகின்றது. இதுவே ஸ்ரீ சக்கரத்தின் முப்பரிமாணமாக அமைந்துள்ள மகாமேருச் சக்கரத்தின் உச்சியில் உள்ள முக்கோண வடிவத்தின் மேல் உள்ள புள்ளியாகிய பிந்து.

நவ ஆவரணங்களாகவுள்ள மகாமேருச்சக்கரம் இவ்வாறு பல்வேறு படிநிலைகளில் உள்ள அண்டத்தொகுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக, ஒழுங்கு முறையில், ஒன்றில் ஒன்று ஒடுங்கி, ஈற்றில் யாவும் சக்தியில் ஒடுங்க, அறுதியாக சக்தியும் சிவத்தில் ஒடுங்குவதைக் காட்டும் இயந்திர வடிவமாகும்.

சிவலிங்கத்தில் உள்ள ஆவுடையார் இந்த மகாமேருச்சக்கரத்தின் முக்கோண வடிவு குறிக்கும் பராசக்தியே. இந்த ஆவுடையாரை ஊடறுத்து நிற்கும் லிங்கம் மகாமேருச்சக்கரத்தின் உச்சிப் புள்ளியான பிந்து ஆகும். சில சக்கர வடிவங்களில் இந்தப்புள்ளி நீட்டமாக இலிங்க வடிவிலேயே அமைந்திருப்பதைக் காணலாம். இது ஈற்றில் சக்தியும் சிவத்தில் ஒடுங்குவதைக் குறிக்கின்றது.

சக்தியை முழுமுதற் கடவுளாகக்கொள்ளும் சாக்த சம்பிரதாயத்தில் சிவமும் சத்தியில் ஒடுங்க, ஈற்றில் சத்தியே நிலை பெற்றிருப்பதாகச் சொல்வார்கள். அவர்கள் மகாமேருச்சக்கரத்தின் முக்கோணத்தை சிவம் என்றும், அதன் மேல் உள்ள புள்ளியை சக்தி என்றும் கொள்வர். இது சிவனின் உடலின் மேல் அமர்ந்திருக்கும் சக்தியின் திருவுருவப் படங்களுக்கு ஒப்பானது.

ஆயினும் இம்முறையில் சிவலிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கும் இலிங்கத்துக்கும் விளக்கம் தர முடிவதில்லை.

சைவம் ஒன்றேதான், தான் உள்ளிட்ட கடந்த கால,நிகழ்கால, எதிர்கால மதங்கள், அவற்றின் கொள்கைகள், வடிவங்கள் யாவற்றையும் உள்ளடக்கக்கூடியதாகவும், விளக்கும் தன்மையதாகவும் அமைந்து இவை எல்லாவற்றுக்கும் அப்பாலானதாய்,இராஜாங்கத்து அமர்ந்து விளங்குகின்றது. சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும்.

இறுதியாங் காலந் தன்னில் ஒருவனே; இருவருந்தம்
உறுதியின் நின்றா ரென்னின் இறுதிதான் உணாடாகாதாம்
அறுதியில் அரனே எல்லாம் அழித்தலால் அவனால் இன்னும்
பெறதும்நாம் ஆக்க நோக்கம் பேரதி கரணத்தாலே
-சிவஞானசித்தியார் பாடல்55-
At the moment of the final dissolution of the universe there is only One,
If both of them are firm in their existence, then there wouldn’t be an End,
At last everything is Haran, as He is everlasting after dissolving all;
We get everything back with His great operations (of creation, sustenance, dissolution, obscuration and Bestowing grace).
– Siva Jnana Siddhiyaar Song -55-

இவையே சைவத்தில் கூறப்பட்ட பிரளயங்கள் / உலக முடிவுகளாகும்…
தொடர் முற்றும்..

ஹர ஹர நம பார்பதீபதையே– அரஹர மஹா தேவா….
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.

நன்றி Dr. இ. லம்போதரன் (MD)

Dr. இ.லம்போதரன் (MD)

Dr. இ.லம்போதரன் (MD)

Leave a Replay