உலக முடிவு எப்போது – பகுதி – 1

விஞ்ஞான உலகம் எவ்வளவு விந்தைகளைக் கண்டுபிடித்து நம்மை வியக்க வைத்தாலும், நமது முன்னோர்கள் கண்டு சொன்னவையில் ஆயிரத்தில் ஒன்று என்ற விதத்தில் தான் அவை இருக்கின்றன என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டு நம் முன்னோர்களுக்குத் தலை வணங்க வேண்டும். நம் பெருமையும் உயர்வும் நமக்குத் தெரியாமல் நமக்குள் நாமே சண்டையிட்டு இழிவுபடுத்திக் கொண்டு உறுதியற்ற உண்மைகளைக் கொண்ட மற்றவரைப் பெரிதாக மதிக்கின்றோம். வியக்கின்றோம். இதைத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொன்னார்களோ?

உலகத்தின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் பற்றி சைவம் என்ன கூறுகின்றது ? **விஞ்ஞானம் என்ன கூறுகின்றது ?
**நவீன விஞ்ஞானமும், சைவமும் முரண்படுகின்றதா ?

“ஹர ஹர நம பார்பதீபதையே–அரஹர மஹா தேவா….
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்”….
அப்பெரும் புவிக்குத் தானோர் ஆயிரம் கோடி அண்டம்”
————————-கந்தபுராணம்———————

பூமி சார்பாகவே ஆயிரங்கோடி அண்டத் தொகுதிகளுக்கு மேல் உள்ளன என்று கூறியுள்ளது கந்தபுராணம். இன்று அண்டவியல் விஞ்ஞானமும் இதையே உறுதி செய்துள்ளது. இந்த அண்டத்தொகுதிகள் பெரு நாத வெடிப்பின் (cataclysmic explosion of Big Bang) ஊடாக வெடித்து இன்றும் விரிந்து கொண்டிருக்கின்றன என்று இன்றைய அண்டவியல் கூறுகின்றது. இதையே மாணிக்கவாசகர்

“அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி, ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”
————————–திருவாசகம்————-

மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இவ்வாறு விரிவடைகின்ற அண்டத்தொகுதியின் காட்சியை விளக்குகின்றார். இந்த அண்டத் தொகுதி அதன் தோற்றத்தில் இருந்து இன்னமும் விரிவடைந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை விஞ்ஞானத்துக்கும் பிடிபடாமல் இருந்த ஒன்றாகும்.

இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானியாகிய “ஸ்டீவன் ஹோக்கிங்ஸ்” இதை தமது ஆய்வுகளில் விளக்கும்வரை மாணிக்கவாசகரின் “நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்ற வரிகளுக்கான சரியான விளக்கம் யாராலும் தரப்படவில்லை.

இவ்வாறு விரிவடைகின்ற அண்டத் தொகுதிகள் யாவும் அவற்றின் உள்ளிட்ட சடக்கோளங்களின் பிடி அதிகரிக்க, அதிகரிக்க அவற்றின் விரிவாக்கவிசை குறைந்து ஈற்றில் ஒடுங்கத்தொடங்கும். இவ்வாறு எல்லா அண்டத்தொகுதிகளும் கோடிக்கணக்கான ஆண்டுகள் களித்து மீண்டும் நெருங்கிவந்து ஈற்றில் எங்கிருந்து முன்னர் வெளிப்பட்டுத் தோற்றியதோ அதே கருஞ்சுழியுள் (Black Hole) சென்று ஒடுங்குகின்றன.
இதையே சிவஞான போதம் முதலாவது சூத்திரம்

“தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்” என்று கூறியுள்ளது
.
இவ்வாறு உலகம் யாவும் ஒடுங்குவதையே மகாசங்காரம் அல்லது பேரூழிக்காலம் என்று சைவம் கூறும். இப்போது நாம் காணுகின்ற பௌதிக, இரசாயன, உயிரியல் விதிகள் மற்றும் செயற்பாடுகளின் இருமைத்தன்மையும் இல்லாமல் போய் ஒருமையிலே யாவும் ஒடுங்குகின்றன. இதையே பேரூழிக்காலத்தில் சத்தியும் சிவத்தில் ஒடுங்குவதாகச் சைவம் கூறுகின்றது.

“இறுதியாம் காலந்தன்னில் ஒருவனே;
இருவருந் தம் உறுதியில் நின்றார் என்னில்
இறுதிதான் உண்டாகாதாம்;
அறுதியில் அரனே எல்லாம்” ——-சிவஞானசித்தியார்————–

இவ்வாறு ஒடுங்கிய அண்டத்தொகுதிகள் மீண்டும் பல்லாயிரக்கணக்கான வருடங்களின் பின்னர் அதே இடத்தில் இருந்து மீண்டும் இன்னொரு பெருநாத வெடிப்பாக வெளிப்படும் என்று அண்டவியல் விஞ்ஞானம் இன்று கூறுகின்றது. இதையே ஒடுங்கிய இடத்தில் இருந்து மீண்டும் தோற்றும் என்று

“அந்தமே ஆதி என்மனார் புலவர்”

என்ற சிவஞானபோதம் முதலாம் சூத்திர வரிகள் கூறுகின்றன.
இந்தப் பேரண்டத்தொகுதியினுள்ளும் சிறு அண்டத்தொகுதிகள் இன்னமும் இவ்வாறான சிறிய பெருநாத வெடிப்புகளாக இன்னமும் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன; இவ்வாறே சிறிய அண்டத்தொகுதிகள் கருஞ்சுழியில் ஒடுங்கி மறைந்து கொண்டே இருக்கின்றன என்று கூறும் இன்றைய அண்டவியல் இவற்றில் சிலவற்றை அவதானித்தும், பதிவு செய்தும் உள்ளது.

கடவுள் என்றோ ஒருநாள் உலகத்தையும் அதிலுள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களையும் இன்றுள்ளவாறே படைத்துவிட்டு ஓய்ந்திருக்கின்றான் என்று சைவம் சொல்லுவதில்லை. கடவுள் சதாகாலமும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற பஞ்சகிருத்தியங்களையும் தொடர்ந்து ஆற்றிக்கொண்டு இருப்பதாகச் சைவசித்தாந்தம் கூறுவது இன்றைய விஞ்ஞானத்தின் அண்டவியல் தோற்ற, இருப்பு, ஒடுக்கக் கொள்கைகளுடனும் முரண்பாடுகள் ஏதுமின்றி நன்கு ஒத்திருகின்றது.

கருஞ்சுழியுள் மறைந்த உலகத்துக்கு அங்கு என்ன நடக்கின்றது? அங்கே அது என்ன வடிவத்தில் இருக்கின்றது? என்று விஞ்ஞானத்தால் அறிய முடியவில்லை. ஆயினும் அங்கு ஒன்றுமே இல்லாமல் சூனியமாகப்போவதில்லை. கருஞ்சுழியுள் ஒடுங்குகின்ற அண்டத்தொகுதி அங்கு தூலமாக வெளிப்படையாக இல்லாமல் சூட்சுமமாக மறைந்துள்ளது என்று இன்றைய விஞ்ஞானம் விளக்கம் கொடுக்கின்றது.

இந்த உலகத்தொகுதிக்கு வித்தாகிய மாயை ஒரு சூட்சுமமான உள்பொருள் என்றும் (மாயை ஒரு உண்மைப்பொருள் ) , அதிலிருந்து தோன்றும் தூலமான இந்த உலகத்தொகுதிகள் யாவும் மீண்டும் அந்த சூட்சுமத்திலேயே ஒடுங்கியிருந்து மீண்டும் படைப்புக்காலத்தில் தூலமாக வெளிப்படுகின்றன என்றும் சைவம் கூறுகின்றது.

“நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத்திற்கோர் வித்தாய் உள்ள மாயை” ——————-சிவஞானசித்தியார் ————–

இவ்வாறு உலகங்களின் தோற்றம், இருப்பு, அவற்றின் ஒடுக்கம், மீண்டும் அவைகளின் தோற்றம், இவற்றின் கால எல்லைகள் பற்றிய உண்மைகள் யாவும் சைவத்தின் அடிப்படை நூல்களான நான்கு வேதங்களிலும், இருபத்தெட்டு ஆகமங்களிலும், இருநூற்றேழு உப ஆகமங்களிலும், நூற்று எட்டு உபநிடதங்களிலும், பதினெட்டு புராணங்களிலும், மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களிலும், தேவார, திருவாசகங்கள் உள்ளிட்ட பன்னிரு தமிழ்த் திருமுறைகளிலும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களிலும், இவற்றின் வழிவந்த திருப்புகழ், தாயுமானார் பாடல்கள், பண்டார சாத்திரங்கள் போன்ற பல சார்பு மற்றும் வழி நூல்களிலும் மீண்டும் மீண்டும் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன.

இவற்றின் சுருக்கத்தை யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் தமது நான்காவது பாலபாடத்திலே மீண்டும் வழங்கியிருக்கிறார். இருந்தும் நாம் இவைகளையெல்லாம் பழமைவாதிகளின் நூல்கள் என்றும், மூட நம்பிக்கைகளின் திணிப்பு என்றும், காலத்துக்கு உதவாத, ஒவ்வாத கற்பனைக் குப்பைகள் என்றும், பௌராணிகர்களின் புழுகு மூட்டைகள் என்றும், ஆரியர்களின் திணிப்பு என்றும் பலவாறாகப் புறக்கணித்தும், இகழ்ந்தும், ஒதுக்கியும் வருவது நமது தமிழினத்தின் அழிவுக்கான அடையாளமாகும்.

ஆயினும் சமீபத்தில் வெளிவந்த 2012 என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் பின்னர் உலக அழிவைப்பற்றி கருத்து பரவலாக பேசப்படுகின்றது. இக்காலத்தில் இன்றைய விஞ்ஞானமே வியக்கும் அளவுக்கு இவ்வளவு அண்டவியல் உண்மைகளைத் தன்னுள் அடக்கியுள்ள நமது சைவம் இந்த உலக முடிவைப்பற்றி என்ன சொல்லியுள்ளது என்று சுருக்கமாகப் பார்ப்போம்.
உலக முடிவைப் பிரளயம் என்று சைவம் சொல்லுகின்றது. இவ்வாறு ஐந்து வகையான பிரளயங்களைப்பற்றியும் அவற்றின் காலங்களைப் பற்றியும் சைவம் விளக்கமாகவும், துல்லியமாகவும் சொல்லுகின்றது. .பதிவு நீண்டதால் சைவம் என்ன சொல்கின்றதென்று அடுத்த பதிவில் பார்ப்போம்..

பகுதி – 2 தொடரும்

நன்றி Dr. இ.லம்போதரன் (MD)

Picture of Dr. இ.லம்போதரன் (MD)

Dr. இ.லம்போதரன் (MD)

Leave a Replay