திருப்புகழ் தோன்றிய வரலாறு

பகிர்
Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp
Email
Print
Pocket

அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன்.

நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம் “சும்மா இரு சொல்லற” என்ற மௌன மந்திரோபதேசம் பெற்று நிர்விகற்ப சமாதியில் வீற்றிருக்க, முருகன் மயில் மிசைத்தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடுதி” என்றருள் புரிய அருணகிரியார் மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை “ஏடெழுதா முழு ஏழையாகிய” சிறியேன் எங்ஙனம் பாடுவேன் என்றும், “நாக்கைநீட்டு” என்று வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை எழுதினார்.

சேந்தமிழ்ப் பரமாசாரியனாம் செவ்சேட்பெருமான தனது “ஞானமூறு செங்கனிவாய்” மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்கவே கடல் மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார். முருகவேள் “வயலூருக்குவா” என்றருள் புரிய அருணகிரியார் வயலூர்சென்று பொய்யாக்கணபதி சந்நிதியில் நின்று “கைத்தலம் நிறைகனி” என்ற திருப்புகழைப்பாடினார். முருகன் கனவிலும் நனவிலும் அடிக்கடி தரிசனந்தந்தருள் புரிந்ததும் தெய்வீகம் பொருந்திய திருத்தலமானபடியாலும் வயலூரையும் திருப்புகழில் இடையிடையே பாடினார்.முருகன் திருவடிபட்டு அனுக்கிரகம் பெற்ற ஒப்பற்ற பாமாலைதான் தித்திக்கும் திருப்புகழ்.

கந்தவேளின் திருவடிகள் மூன்று இடங்களிற்பட்டன.மயில்மீது, தேவர்தலைமீது, மூன்றாவது திருப்புகழ் ஏட்டில் எத்தனையோ சிறப்புக்கள் மிக்கதிருப்புகழை இடையறாது அன்புடன் ஓதினால் முருகன் நம் வயப்படுவான். திருப்புகழை ஓத ஆசைப்பட்டாலே போதும் எத்துணைப் பாவங்கள் புரிந்தாரேனும் பாவநாசகனாகிய குமரக்கடவுள் தரிசனையுண்டாகுமேல் பாவங்கள் முழுவதும் நீங்கித் தூயவராவார். திருப்புகழின் சந்தத்திற்கு இணையான ஒன்று எந்த மொழிஇலக்கியத்திலுமில்லை. விந்தையான சந்தம் கொண்டு சிந்தைகவர்வது.

சங்கத்தமிழின் தலைமைப்புலவனாம் குமரவேளைச் சந்தத்தமிழிற் பாடித் திருப்புகழ் ஆக்கியவர் அருணகிரிநாதர். நம் பிறவிப் பந்தம்களைய வல்ல சங்கத்தமிழ்நூல் “திருப்புகழ்”

பேரின்பப் பெருவெள்ளம் அது. படிப்போரைப் பக்தி வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்யும் தெய்வீகத்தேனே அருணகிரியின் இலக்கியம். முருகன் திருவருளை வேண்டிச் “சந்தக்கடல் என்று கூறுமளவில் பல ஆயிரம் பாமாலைகளை முருகன் திருவடிகளிற் சூட்டி மகிழ்ந்தார் அருணகிரிநாதர். இன்று நமக்குக் கிடைப்பவை 1328 திருப்புகழ்ப் பாடல்களே.

ஆறுபடைவீடுகள் கதிர்காமம் மற்றும் அநேக தலங்களிற் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமானைப் பாடியுள்ளார். உலகமெலாம் உய்வுபெறும் பொருட்டு ஞானப்பெருவெளியில் அருவரதம் தாண்டவஞ்செய்யும் நடனசபாபதிகளிக்க அவர்முன் குழந்தைக் குமரவேள் திருநடனம் புரிவர். தண்டையும் அழகிய வெண்டையும், கிண்கிணியும், சதங்கையும் இனிய ஒலியுடைய வீரக்கழலும், சிலம்பும் இனிது ஒலிக்கச் சிவபிரானது திருமுன் அன்பான இனிய நடனம் புரிந்து மிக்க மகிழ்ச்சியடைந்து நின்ற அன்புபோல, அடியேனும் அத்திரு நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியடையுமாறு கடப்பமலர்மாலையும் அழகிய மணிமகுடங்களும் தாமரைமலர் போன்ற சிவந்த திருக்கரங்களும் ஒளிவீசும் வேலாயுதமும், கருணைபுரிகின்ற திருக்கண்களும், ஆறு திருமுகங்களும், சந்திரகிரணம் போன்ற குளிர்ந்த ஒளியும் அடியேனது கண்கள் குளிரத்தோன்றி அருள்புரியாயோ என அருணகிரியார் வேண்ட அவருக்குக் கந்தவேளின் திரு நடன தரினம் கிடைத்தது.

திருச்செந்தூர், திருத்தணிகை, பிரான்மலை, சிதம்பரம் முதலிய திருத்தலங்களில் முருகன் திருநடனக் கோலத்தில் தோன்றி மகிழ்வித்தார். நம்மிடத்தில் என்னென்ன குறைகள் உளவோ அவற்றையெல்லாம் உணர்ந்து இறைவனிடம் முறையிட்டால் அக்குறைகளை இறைவன் நீக்கி அருள் புரிவான். பல்வேறு குறைகளை ஆன்மாக்கள் எப்படி முறையிட வேண்டுமோ, பற்பல விண்ணப்பவடிவில் நம்பொருட்டு அருணைமுனிவர் பற்பல பாடல்களைப் பாடியருளினார். அயனார் நமது தலையில் எழுதும் எழுத்து அறுமுகனார் திருவடிபட்டவுடன் அழிந்துபோகும். இறைவனுடைய திருவடி சென்னியிற் சூட்டப்பெறுவதே பெறுகளுட் சிறந்த பேறு ஆகும்.

திருநாவுக்கரசர் விண்ணப்பஞ் செய்யவே சிவபெருமான் மாலும் அயனும் காணாத மலரடியை “உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்றவர் தம் சென்னிமிசை சூட்டினார். அதேபோல் முருகவேலிடம் அருணகிரிநாதர் “என் சென்னிமிசை திருவடி சூட்டியருளும்” என வேண்ட அளவற்ற மாதவத்தின் பயனாக அவருக்கு அத்திருவடிப் பேறுகிடைத்தது. முருகன் திருவடி வேதாகமங்களுக்கும் எட்டாததன்றோ? அருணையடிகளின் பெருமை அளவிடற் கரியது. பிரபுட தேவமன்னன் கண்டு இன்புற, முருகன் ஆடிவந்த அழகை “அதலசேடனாராட என்னும் திருப்புகழைப் பாட முருகன் கருணை கொண்டு காட்சியளித்தார். முருகன் அஷ்டமாசித்திகளை அருளிச் செய்ததைத் திருவகுப்பிற் பாடுகிறார். திருவிடைக் கழியில் உள்ள குராமரத்தடியில் முருகன் உலாவிய அழகைப் பாடுவார்.

கந்தபுராணம், சிவபுராணம், இராமாயணம், பாரதம், மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பற்றிய பல செய்திகளைத் திருப்புகழிற் பாடியுள்ளார். சித்ரகவியால் நான் உன்னைப் பாட வேண்டுமென விண்ணப்பிக்கவே திருஎழுகூற்றிருக்கை என்கிற தேர் வடிவில் அமைந்த சித்ரகவி பிறக்கிறது. வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருவகுப்பு, திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி ஆகியன ஒப்பற்ற மகா மந்திரங்கள். எத்தனையோ ஆயிரங்கோடி அலங்காரங்களுண்டு கந்தனுக்கு. ஆனால் கந்தரலங்காரமே அலங்காரம். சொற்சுவையும் பொருட்சுவையும் இட்டளைந்த தேன் பாகாய் இருக்கும் வண்ணம் கட்டளைக் கலித்துறையாக கவிவிருந்து வைத்தார். உயிர்களுக்குப் பற்றுக் கோடாக விளங்கும் கந்தனோடு ஒன்றுபடுவது தான் கந்தரனுபூதி. கூடு விட்டுக் கூடுபாய்ந்து கிளிரூபத்திலிருந்து “கந்தரனுபூதி பாடப்பட்டது. சிறிய பாடல்கள் ஒவ்வொன்றும் அனுபூதியில் விளைந்த அருள்முத்து.

ஆன்மீகப் பாரிஜாதம். கந்தனின் அருள் முகத்தை மாந்திக் களித்த அருணகிரி, நாம் நீந்திக் களிக்கத் தந்தநீர்நிலை நெஞ்சக்கன கல்லு நெகிழ்ந்துருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கியல்சேர் செஞ்சொற்புனை மாலையே அருணகிரிசூட்டிய அனுபூதிமாலை பரஞானத்தின் உச்சம்.
இவ்வாறு நமக்கெல்லாம் மந்திரம் சொன்ன அருணகிரிக்கு அறுமுகப்பரமன் ஒரு மந்திரம் உபதேசித்தான். “சும்மா இரு சொல்லற” செயலற்று, பேச்சற்று, இருத்தல் கையும் வாயும் அடங்க மனம் தானே அடங்கும். மனமற்றநிலை சும்மா இருக்கும் நிலை.நான், தான் என்ற வேறுபாடு நீங்கி மோனநிலைபெற்றல் சான்று ஆரும் அற்ற தனிவெளியில் முருகனோடு இன்புறலாம். “சிந்தையை யடக்கியே சும்மா இருக்கின்றதிறம் அரிது என்கிறார் தாயுமானவர்.

ஆகவே மௌனமென்பதும் “சும்மாஇரு” என்பதும் சுட்டிறந்த முதல்வனையுணரும் ஞானநிட்டை என்பது தெளிவு. ஆகவே முருகப் பெருமானின் திருத்தல மகிமைகளைப் பாடிய தேன் தமிழ், சங்கத்தமிழ், அருணதளபாதபத்மம் அனுதினமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில்வீரனின் திருப்புகழை ஒரு நாளைக்கு ஒரு திருப்புகழாயினம் மறவாது பாடவேண்டும். முருகன் திருப்புகழை அன்போடு அனுதினம் பாடினல் ஆறுமுகம் தோன்றம் அவன் ஏறுமயில் தோன்றும் எழில் தோன்றும். “ஞானம் பெறலாம், நலம்பெறலாம், எந்நாளும் வானம் அரசாள் வரம் பெறலாம், மோனவீடு ஏறலாம், யானைக்கிளையான் திருப்புகழைக் கூறினார்க்காமே இக்கூற்று” பக்தியோடு படிப்போருக்கு இவையாவும் நிச்சயம் கிடைக்கும். “கருமேனி தாங்காமல் திருமேனி தாங்கி வந்தவள்ளலைப போற்றித் திருப்புகழ் அமிர்தத்தினைப் பருகி விதியையும் வென்றிடுவோம். மும்மலங்களினின்றும், அகந்தையினின்றும் நம்மனத்தைக் கட்டுப்படுத்தி செயலையும் பேச்சையும் குறைத்து கந்தப்பெருமானைச் சிந்தையிலிருத்தப் பழகிக்கொண்டால் கந்தப்பெருமானே நமக்குக் குருவாக இருப்பான்.

அந்தக் குருபரனின் திருவருளும் நமக்குக் கிட்டும். அருணகிரிநாதர் அருவியெனப்பொழிந்த ஆறுமுகன் திருப்புகழை, சந்தம் முந்தும் செந்தமிழில் கந்தனைப்போற்றிய பேரின்பச் சுவையை அருள முதத்தினை ஓதி உணர்ந்து, மகிழ்ந்து, துதித்து உமைபாலன் திருவருள் பெறுவோமாக.

உங்கள் கருத்துகள் ​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

புதிய பதிவுகள்