அறுமுகநூறு – கவிஞர் சச்சிதானந்தம்

அறுமுகநூறு

தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி,

உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி,

சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி,

அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி! 11

 

அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி,

அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி,

தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி,

விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி! 12

 

ஐந்தமு துணவின் சுவையே போற்றி,

நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி!

வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி,

பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி! 13

 

இசைக்கு மயங்கும் இறைவா போற்றி,

இமைக்க மறந்தேன் உன்னைப் போற்றி,

இணைந்து கொண்டேன் தலைவன் போற்றி,

இருண்ட இதயம் களைவோன் போற்றி! 14

 

வாரம் கடந்து, வருடம் கடந்து,

வாழ்வைக் கடந்து, வேட்கை கடந்து,

காமம் கடந்து, கவலை கடந்து,

கந்தன் அருளின் கருணை அடைவோம்! 15

 

சிதிலம் அடைந்த சிந்தனை கடந்து,

உதிரம் அடைந்த நஞ்சினைக் களைந்து,

எதிலும் நிலையா மனதை மறந்து,

கதியென் றறுமுகன் மதிமுகம் தொழுவோம்! 16

 

தா ளிரெண்டும் தீ யாக,

தோ ளிரெண்டும் பூ வாக,

மேனிஎங்கும் நீ ரோட,

வா என்றாய் தா விவந்தேன்!17

 

பிடியோடு உறவாடும் உன்னண் ணனை,

பிடிசாம்பல் கொண்டாடும் உன்னப் பனை,

விடிவெள்ளி போலொளிரும் உன்னம் மையை,

படியேறி வருகையில் பாடுகின் றேன்!18

 

கதிரேறி உச்சிக்கு வந்த பின்னும்,

படியேறு மிச்சைக்கு ஏது விண்ணம்?

நிலவேறு மிரவென்னு மினிய வெண்ணம்,

மனமேறிக் குளிர்வதால் படி ஏறுவோம்!19

 

அரகரா! அரகரா! அதரங்கள் சொல்லும்,

சரவணா! சரவணா! சிகரங்கள் … 20

 

அச்சமுற்ற நெஞ்சம் அரகரா என்றிடட்டும்,

அப்பனுற்ற பணிவைப் பணிவோடு கொண்டிடட்டும்,

அப்பழுக்கு அற்று அன்புமனம் அமைந்திடட்டும்,

அக்கினிக்கு ளுற்ற அறுமுகனைக் கொஞ்சிடட்டும்!21

 

அச்சம் கொடுத்தான், அன்பைக் கொடுத்தான்,

அத்தன் படைத்த அறிவைக் கொடுத்தான்,

அல்லல் கொடுத்து, உள்ளத் தெளிவை,

அள்ளிக் கொடுத்து அகிலம் காத்தான்! 22

 

வடிவேலன் முகம்காணப் படியேறி வருவோம்,

நெடியேறும் சந்தனக் காவடிகள் சுமப்போம்,

கடிவாளம் இல்லாத மனதினைக் காக்க,

அடியேனுன் னடியினில் அடிமையாய் ஆவோம்! 23

 

கந்தவேள் கண்களைக் காணு மென்னம்,

வந்ததால் பூத்திடும் எண்ண மென்னும்,

சிந்தையைக் குன்றெனக் கண்டு கந்தன்,

வந்தமர்ந் தருளுவான் உள்ள மெங்கும்! 24

 

கந்தனைப் பாடிடும் சந்த மெல்லாம்,

வந்தெனைக் கூடிடும் சொந்த மென்று,

பந்தமும் பாசமும் மேவி நின்று,

விந்தைகள் செய்வது மாய மன்று! 25

 

தக்கன் கொடுத்த தளிரை ஏற்ற,

முக்கண் எடுத்த ஈசன் கூற்றை,

தர்க்கம் செய்து எதிர்த்த காற்றே,

பழனியில் வீசும் சரவணக் காற்று! 26

 

பாத மெனும் செம்பூவைப் பற்றிப்,

பாட லெனும் வெண்பூவைச் சூடிப்,

பால மெனப் பாலகனைக் கொண்டு,

பாரிருள் வாழ்வைப் பண்புடன் கடப்போம்! 27

 

பாடுபொருள் கிடைத்துவிட்ட பரவசத்தில் நாம்,

பாடும்பொருள் பரமனவன் கண்ட பொருள்,

வாடுமிருள் மனம் நீக்கி, வந்து

கூடுமருள் குமரனருள் என்ற பொருள்! 28

 

பாலதண் டாயுத பாணியின் பெருமையைப்,

பாடிய படியே படிகளில் ஏறிப்,

பாதச் சுவடுகள் பதிய நடந்தால்,

பாவச் சுவடுகள் விலக்கிடு வானே! 29

 

உண வுண்ண மறுத்துச் சிரித்து,

உடை யணிய மறுத்துக் குதிக்கும்,

உல கின்னும் அறியா மழலையாய்,

உன தருளை ஏற்க மறுத்தோம்! 30

 

மழலைக்கு அமுதூட்டும் அன்னை போல,

மனதினில் பொறுமையை மிக்க உற்று,

மட்டற்ற கருணையால் முழுமை யுற்று,

முருகென்னும் அருளினைப் பருகத் தந்தாய்! 31

 

பழனியில் பழமெனப் பூத்தவன் போற்றி,

பரமனுக் கருளிய பாலகன் போற்றி,

பனியெனக் குளிர்ந்தவன் பாதம் போற்றி,

படையறு வீடுகள் கொண்டவன் போற்றி! 32

 

பழமுதிர்ச் சோலையின் தலைவா போற்றி,

பலவண்ண எழிலுடை இறைவா போற்றி,

பதமலர் சிவந்த பண்டிதா போற்றி,

பதிகம் பாடிப் பணிவோம் போற்றி! 33

 

திருப்பரங் குன்றத் தீஞ்சுடர் போற்றி,

திலகம் தரித்த நுதலே போற்றி,

தில்லை நாதனின் பிள்ளாய் போற்றி,

திசைகள் தோறும் நிறைந்தாய் போற்றி! 34

 

திருத்தணி கைகொண்ட கந்தா போற்றி,

தினைப்புன வள்ளியைக் கொண்டாய் போற்றி,

திருத்தமிழ் வளர்க்கப் பிறந்தாய் போற்றி,

திளைத்திடுவோம் உன் அழகைப் போற்றி! 35

 

செந்தூர்க் கடலின் காற்றே போற்றி,

செந்தேன் உமிழும் இதழே போற்றி,

செறிவுற் றுயர்ந்த அறிவே போற்றி,

செந்தில் நாதச் சுவையே போற்றி! 36

 

வீரங் கத்து வெண்மதியோன் போற்றி,

வீழும் நெஞ்சத்தைக் காத்திடுவான் போற்றி,

வீறு கொண்டெழுந்த சம்ஹாரன் போற்றி,

வீடு பேரளிக்கும் வேலவா போற்றி! 37

 

மோனைத் தொடையில் மலர்ந்தாய் போற்றி,

மோகங் கொடுத்த மயிலோன் போற்றி,

மோதும் அலையென எழுந்தாய் போற்றி,

மோட்சம் கொடுக்கும் முருகா போற்றி! 38

 

நடன மிடும் ஈசனின் மகனின்,

வதன முகம் பேசிடும் விழிகள்,

நுதலில் நீறு பூசிடும் முறைகள்,

முதலில் கண்டு முழுமை அடைவோம்! 39

 

கிடுகிடு வென உயர்ந்த மலையை,

விடுவிடு வென விரைந்து நடந்து,

நெடுநெடு வென நீண்ட உனது,

முடிஅடி யினைக் கண்டு மகிழ்வோம்! 40

 

குக் குடத்துக் கொடியோன் அடியை,

இக் குடத்துக் கடியேன் பற்றி,

முக் குடத்துக் கடுநோய் நீக்கிச்,

சிக் கெடுத்துக் காக்கப் பணிந்தேன்! 41

 

பங்குனிக் கொண்டாட்டம் சித்திரை வரைக்கும்,

பக்தர்கள் கொண்டாட்டம் பாருள்ள வரைக்கும்,

சங்கரன் கொண்டாடும் சரவணன் படைத்த,

மங்கலச் செந்தமிழ் நம்மை வழிநடத்தும்! 42

 

தைப்பூசம் என்றால் தமிழ்மணம் வீசும்,

கைபூசும் சந்தனம் திருமேனி எங்கும்,

பைபூசும் கிளிகளின் செவ்வலகு போல,

தைப்பூச நாயகன் அழகிதழ் சிவக்கும்! 43

 

சிற்றின்ப பேரின்ப பேதங்கள் இன்றி,

உற்றின்ப முனைக்கண்டு நின்றோமே ஐயா!

சற்றுன்னை மனமாரக் கண்டிடும் பொழுது,

பற்றின்றி வாழ்ந்திடப் பழகினோம் ஐயா! 44

 

அலகினைச் சுமந்திடும் கன்னம், முருகன்

அழகினைச் சுமந்திடும் பக்தனின் எண்ணம்,

அமைதியில் நிறைந்திடும் அலகேற்ற உள்ளம்,

அருளினை அடைந்திடும் அழகுற்று நெஞ்சம்! 45

 

குதித் தோடும் மயிலினைக் கொண்டாடுவான்,

குக் குடத்துக் கொண்டையில் நின்றாடுவான்,

துதித் தாடும் பக்தனும் பன்பாடுவான்,

கதித்த மலை நாதனைக் கண்டாடுவான்! 46

 

மிதித்தோடி மான்போல தீ தாண்டுவான்,

மதித்தோடித் தீ மிதித்து மனமாறுவான்!

உதித்தோடும் கதிர்காய வாடுமன்பன், மனதில்

உதித்தாடும் கந்தனால் தீ ஏறுவான்! 47

 

மிக்கக் கொண்ட முருகன் நினைவால்,

சொக்கிக் கண்கள் சுழலு கிறேன்,

முக்கண் கொண்ட ஈசனிடம், குளிர்

நெற்றிக்கண்ணைக் கோருகிறேன் அவனைக் காண! 48

 

சந்தனக் காப்பிட்ட சரவணன் முகத்தில்,

சிந்திடும் நறுமணப் புன்னகை தவழ்ந்து,

செந்தணல் காப்பிட்டு வடுவான நெஞ்சினுள்,

வந்திடும் தென்றலாய், வருடிடும் மென்மையாய்! 49

 

ஆதவன் ஒளிபெற்று மலர்ந்திடும் நிலவாய்நடம்,

ஆடிடும் ஈசனின் விழியொளியில் மலர்ந்தவனே,

ஆனை முகனடுத்து, ஆறுமுக வடிவெடுத்து,

ஆம்பலின் நிறமெடுத்த அழகான வடிவேலனே! 50

 

விமலன் பூத்த நெற்றிக் கண்ணால்,

கமலம் பூத்த கந்தன் கண்கள்,

அமிலம் போன்று வாழ்வை அறுக்கும்,

அல்லல் நீக்கும் அறிவொளி ஆகும்! 51

 

முற்றாத அழகும் முழுநிலவு முகமுங்கொண்டவனே,

வற்றாத அறிவுக் கடலே நின்,

பொற்பாதம் தொட்டு வணங்கிடு மிவ்வேழைக்குள்,

உற்றாட உன்னை அழைக்கிறேன் வந்திடடா! 52

 

சந்தனமும் சரவணனும் சந்தங்களில் வந்தாட,

சிந்தனையில் சிறுதவறும் இல்லாமல் கொண்டாட,

தந்தனத்தோம் என்றுசொல்லித் தாமாகக் காலாட,

கந்தனுற்றோம் என்றுசொல்லி மனமாடிக் கொண்டாடும்! 53

 

திரி கொண்ட தீபக் கார்த்திகையில்,

எரி கொண்ட கண்ணில் உதித்தவனை,

அரி கண்ட அழகு மருமகனின்செவ்,

வரி கொண்ட அடியை வணங்கிடுவோம்! 54

 

மலையைச் சுற்றி நடந்திடுவோம், வண்ண

மயிலைப் பற்றிப் பாடிடுவோம், உள்

மனதைச் சுற்றும் முருகன் நினைவால்,

மடைமை நீங்கி வாழ்ந்திடு வோம்! 55

 

கிரியைச் சுற்றி வலம் வருவோம்,

விரி மனமே என்று வணங்கிடுவோம்,

உறியைச் சுற்றிய கண்ணன் மருமகன்,

அடியைப் பற்றி நலம் பெறுவோம்! 56

 

வண்ண மயில் தோகையின் தண்டாக,

வெண்முகம் கொண்ட வடிவேலா! மனம்

வெண்டாகிச் சருகாகி, வன்மத்திற் கிரையாகி,

உண்டான வடு நீக்கு வேலா! 57

 

நடந்து நடந்து நடைபழகித் துன்பத்தைக்

கடந்து கடந்து துயர் விலகி,

அடர்ந்து படர்ந்த அறியாமை நீங்கி,

தொடர்ந்து உன்னைத் தொடர்ந்திடு வேனே! 58

 

மனம் புரண்டு, தடம் இருண்ட

நிலை கடந்து, நிறை வடைந்து,

இறை உணர்வில் தினம் மகிழ்ந்து,

எனை உனக்கு அர்ப்பணிக் கின்றேன்! 59

 

அதி மதுர மதி முகத்தில்,

எதி ரொலிக்கும் எழில் சிரிப்பில்,

உதித் தெழுந்த பெரும் ஒளியில்,

உழல் வினைகள் விலகி டுமே! 60

 

விடிந்தி ருக்கும் வை கறையில்,

படிந்தி ருக்கும் புது ஒளியே!

படிந்தி ருக்கும் மனத் துயரைக்,

கடிந்த கற்றும் நின் ஒளியே! 61

 

தணிந் தெழுந்து விளையாடும் கடலலையை,

அணிந் தணிந்து நனைந்திருக்கும் செந்தூரனே,

பணிந் துனது தாள்களுக் கணிவிக்கவே,

புனைந் தேனினிய கவிதைகளே! 62

 

முருகனை நினைந்து இருவிழி நனைந்து,

மருவிய மனதின் மாயை கடந்து,

குருவென அவனைப் புனைந்தடி பணிந்து,

கருவென குகனைப் பாவில் வைத்தேன்! 63

 

செருக்கென்னும் சீர்கேட்டில் சிதையாமல் செம்மையுற்று,

நெருப்பென்னும் தீமையினை நெருங்காத நெஞ்சமுற்று,

இருள்என்னும் அறியாமை அடையாமல் ஞானமுற்று,

பொருப்பெங்கும் பூத்தவனைப் பணிகின்ற பேறுபெற்றேன்! 64

 

அதிகாலை வானம்போன்ற அழகான ஆறுமுகனை,

நதிநீரின் சலசலப்பில் சுகமாக வாழ்பவனை,

நொதிக்கின்ற நெஞ்சத்தின் நோய்தீர்க்கும் நாதனை,

துதித் தென்றும் தூமனத்தைக் கொள்வோமே! 65

 

வாழைக் குருத்தாகச் சுருண்டிருக்கும் மனதை,

வாடைக் காற்றாக மென்மையாய்த் தீண்டி,

விரிந்தகன்ற வாழ்வாக மெல்லமெல்ல விரித்து,

வாரிக் கருணை வழங்கிடும் வேலன்! 66

 

ஆமணக்குக் காய்போல முட்கள் முளைத்து,

ஆந்தைகளின் அலறல்கள் அகத்தை அறுத்து,

ஆரிருளுக் கடிமையாகிப் பேரிருளில் வாழ்ந்தவனை,

ஆறுமுகன் அரவணைத்து அருளளித் தானே! 67

 

இச்சை என்னும் பறவையின் சிறகை,

இம்மைப் பிறவியில் முழுதாய் உதிர்த்துப்,

பிச்சை பெற்றுப் பெற்ற பிறவியைப்,

பெற்றவ னிடமே பணிவுடன் படைப்போம்! 68

 

வாழ்வை வெறுத்துத் தோற்றுத் துவண்டு,

வாழும் வழிமுறை தெரியா தவர்க்கு,

வாழும் வாய்ப்பை மீண்டும் கொடுத்து,

வையகக் கடைமை செய்திடச் செய்வான்! 69

 

வாழ்வை முழுதாய் வாழ்ந்து களித்து,

வாழ்வின் பொருளை உணர்ந்த மனிதரை,

வாழ்த்திப் போற்றி வாவென் றழைத்து,

வேலவன் தன்னுள் கலந்திடச் செய்வான்! 70

 

ஊருடன் கூடி இழுக்கும் போது,

தேருடன் சுழலும் சக்கரம் போல,

மாருத உயிர்த்தேர் சுழன்றிட முருகன்,

மானுட யாக்கைச் சக்கரம் செய்தான்! 71

 

வாகை மலரென எழிலுரு முருகனை,

வாழை மலரின் சிறுமடல் போன்ற,

வடிவுடை தீபம் ஏற்றிப் பணிந்து,

வாமன வடிவ மனதினை விரிப்போம்! 72

 

நோக்கத்தை மறந்து திசைமாறிப் பறக்கும்

நெஞ்சுக்கு உண்மையைத் திடமாக உணர்த்தி,

நல்வழிப் பாதையில் தொடர்ந்து நடத்திடும்,

நித்தியத் தெய்வமே, நாதனே போற்றி! 73

 

இடும்பன் சுமந்த மலையில் அமர்ந்து,

இடும்பை நீக்கி அருளும் கடம்பா,

நடுங்கும் நெஞ்சின் நரகத் துன்பம்,

ஒடுங்கும் படியென் உயிரைக் காப்பாய்! 74

 

அறுபடை வீடு என்பது உண்மையில்,

அருள் தரும் குகனின் குறியீடு,

அகிலம் தோறும் வாழும் மனிதரின்,

அகமே அவனின் பெரு வீடு! 75

 

நாநில மெங்கும் பேதங்கள் இன்றி,

அறுபடை வீடுகள் அமைத்து நின்று,

நாவள மிக்க சான்றோர் சொல்லைக்

காவல னாகக் காத்திடு வான்! 76

 

அகவல்கள் படைத்து அறுமுகனைப் பணிந்து,

அகவை மாறா அவனெழிலில் திளைந்து,

அகவும்மயில் வாகனன் அருளை அடைந்தால்,

அகமும்மயில் தோகையென அழகாய் விரியும்! 77

 

அருகில் வரவர ஆற்றல் பெருகி,

அலையென அரகர ஓசை பரவி,

அறுமுகத் தருதரு அருளைப் பருகி,

அன்பர்கள் சிரமிரு தாளைப் பணியும்! 78

 

கோடிட்ட இதழ்களும், மேடிட்ட கன்னங்களும்,

நீறிட்ட நெற்றியும், வேலுற்ற கரமும்,

நாவுற்ற தமிழும், நிறைவுறக் கண்டு,

நீருற்றுக் கண்களில் நாதனைத் தொழுவோம்! 79

 

வெஞ்சினம் கொண்டு, வெண்டெனத் தனக்குள்,

வெற்றிடம் கண்டு வீழ்ந்திடும் நெஞ்சின்

வன்மமும், வாட்டிடும் துன்பமும் நீங்கும்,

வெண்முகில் வேலனின் இன்னடி பணிந்தால்! 80

 

அறுமுகன் என்னும் ஆழ்ந்த பொருளை,

அழகுற அகிலம் சூழ்ந்த பொருளை,

அகமுக மிரண்டும் காணும் பொருளை,

அடிபணிந் துணர்ந்து அன்பை உணர்வோம்! 81

 

சிக்கலில் வேலுற்றுச் செந்தூரில் வீறுற்றுச்

சூரனைக் கூறிட்ட பின்னாலும் அருளுற்றுச்,

செங்கொண்டைச் சேவலாய்ப் பூங்கொண்டைப் பீலியாய்ச்

செய்தவனைக் காத்திட்ட சிங்கார வேலனே! 82

 

குடிக்கும் தண்ணீரைக் குடித்திட முடியாமல்,

துதிக்கை துண்டாகித் துடிக்கும் யானையாய்,

துதிக்கும் உன்னைநான் துதித்திட முடியாமல்,

தடுக்கும் நெஞ்சத்தின் மயக்கம் நீக்கிடுவேலா! 83

 

அகவும் மயிலது அரவம் தாக்கும்,

அறுமுகன் அருளது அகந்தை நீக்கும்,

அலறும் ஆந்தை இரவில் தாக்கும்,

அலையும் மனத்தைக் கரவேல் காக்கும்! 84

 

ஒளியில் நிறைந்த இறைவனின் அழகைக்,

கண்டவர் மனதின் களங்கம் நீங்கும்,

விழியில் நிறைந்த அவனது எழிலால்,

மனதில் நிறையும் அமைதியின் தோற்றம்! 85

 

ஆற்றல்நிறை ஆதவனும் வணங்கி நிற்க,

ஆலயமாய்க் கானகமே அமைந்து நிற்க,

ஆற்றங்கரை நாகரிகம் பிறக்கும் முன்னே,

ஆறுமுகன் அவதரித்து அகிலம் காத்தான்! 86

 

வெட்டிரும்பின் விசையுடனே உள்ளத்தில் பாய்ந்து,

உட்செருக்கைக் கட்டறுத்து, நற்குணத்தின் மொட்டவிழ்த்து,

பற்றறுக்கும் பணியேற்று, எக்கணமும் துணையிருக்கும்,

தண்டபாணி கொண்டிருக்கும், காக்குந் தனிவேல்! 87

 

சிற்றின்பக் கோட்டுக்குள் கட்டுண்ட உலகை,

மற்றின்ப மாயைக்குள் மூழ்கிடும் மனதை,

அற்றின்ப துன்பங்கள், வாழ்ந்திடும் வழியில்,

கற்பித்து வழிநடத்தும் கந்தனின் கருணை! 88

 

நிறமற்ற நீருக்கு நிறம்தரும் அருவியைப்போல,

உயிருக்கு நிறம்தந்து நிரந்தரமானவன் நாதன்,

மணமற்ற நிலத்துக்கு மணம்தரும் மழைத்துளிபோல,

மனதுக்குள் நறுமணம் பரவிடச்செய்வான் நாதன்! 89

 

நிலவின் தனித்துவம் இரவில் உதிப்பது,

இரவின் தனித்துவம் நிலவைச் சுமப்பது!

உயிரின் தனித்துவம் குகனைத் துதிப்பது,

குகனின் மகத்துவம் கருணை நிறைந்தது! 90

 

நெடுவெண் நிலவின் ஒளியின் சுடரே,

சுடுவெங் கதிரோன் சுடரும் நீயே,

இடுகண் ணொடுங்க அருளும் கடலே,

கடுகின் அளவும் உமையாம் அறியோம்! 91

 

விண்மீன்கள் பலகோடி விளையாடும் நேரத்திலும்,

ஒருமீனது சுடர்வீசிச் சிரிக்கின்ற வேளையிலும்,

அறுமீன்கள் தோள்களிலே தவழ்ந்த தமிழுள்,

நதிநீரில் மீன்போல நீங்காமல் மூழ்கிடுவோம்! 92

 

காமுகனாய் வாழ்ந்திருந்த காலங்கள் போதும்,

அறுமுகனின் அரவணைப்பில் இனிவாழ வேண்டும்,

ஆகமங்கள் அறியாத பாமரன் என்றாலும்,

அன்புநெறி தவறாமல் உயிர்வாழ வேண்டும்! 93

 

பாலையாய்த் திரிந்த வாழ்க்கைப் பாதையை

குறிஞ்சியென் றமைத்துத் திருத்திடும் தலைவன்,

ஏழையாய்ப் பிறந்த எளியவர்க் கெல்லாம்,

பார்வையால் அருளினை வழங்கிடும் முருகன்! 94

 

மெய்யென என்னை நினைக்கவு மில்லை,

பொய்யென நெஞ்சம் வருந்தவு மில்லை,

எய்தவன் உந்தன் எண்ணப் படியே,

வையகக் கடைமை செய்கின் றேனே! 95

 

பாடிப் பணிந்து தொழுதிட மனமின்றி,

ஊடித் துணிந்து உன்னை மறந்தவன்,

தேடித் தொடர்ந்து மலரென உன்னை,

சூடிக் கனிந்த மனங் கொண்டேனே! 96

 

மூடிய மனதுக்குள் முடிவற்று மலர்ந்து,

ஓடிய மனதினை ஒருநிலைப் படுத்தித்

தேடிய அமைதியைத் தெளிவுறக் கொடுத்துப்

பாடிய எனக்குள் பரவசம் கொடுத்தான்! 97

 

ஓரிச்சை பேரிச்சை உள்ளத்தில் ஆடும்,

மூவிச்சை கடக்கும்முன் முருகனில் கலக்கும்,

சீரிச்சை செவ்விச்சை ஆறாக ஓடும்

பேரின்பப் பெருவிச்சை நிறைவேற்று வேலா! 98

 

நாவடியில் நாதன் பாவைச் சுமந்து,

காவடியில் மயிலின் தோகை சுமந்து,

ஈரடிகள் சிவக்கும் படியாய் நடந்து,

இறைவனடி நாடி இன்பம் அடைவோம்! 99

 

அசைவற்றுக் கிடக்கும் முதலை போல,

ஆடிச் சலனம்கொள்ளா இதயம் கொண்டு,

அகமும் அங்கமும் குகனில் ஒடுங்கி,

அறுமுக ஒளியில் ஐக்கிய மாவோம்! 100

(நிறைவுற்றது)

எழுதியவர்:  கவிஞர் சச்சிதானந்தம்

நன்றி: தியாகராஜா லம்போதரன்

Senthi

Senthi

Leave a Replay