குமாரவயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

Arulmigu Sri Subramaniyaswamy Temple, Kumara Vayalur, Tiruchirappalli

முகவரி & தொடர்பு


Address

Arulmigu Sri Subramaniyaswamy Temple, Kumara Vayalur, Tiruchirappalli – 620 102. Tamilnadu, India.

GPS

10.8289292, 78.6232938


திறந்திருக்கும் நேரம்

தகவல் இற்றைப்படுத்தல்


தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..

சிவபெருமானை முருகன் பூசை செய்த தலம். முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் இங்கு உள்ளது.நாக சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருக்குளத்தில் (நாக சர்ப்ப தோஷம்) மூழ்கி முருகனை தரிசித்தால் திருமணத்தடை நீங்கி சுப காரியம் நடைபெறும்.இந்த வயலூரில் குடிகொண்டு இருக்கும் முருகப்பெருமான் ஒரு உண்மையை விளக்குகிறார். முருகப்பெருமான் தந்தையையும் தாயையும் முன்னிறுத்தி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை நமக்கு புகட்ட அன்றாடம் தாய் தந்தையர் காலில் பணிந்து பூசனை புரிந்து அருள் பெற்ற பாலகராய் காட்சி தருகிறார்.

மூலவர்

சுப்பிரமணிய சுவாமி, ஆதிநாதர் (அக்னீஸ்வரர்)

அம்மன்

வள்ளிதேவசேனா , ஆதிநாயகி (பூர்வ சித்தி நாயகி)

தல விருட்சம்

வன்னிமரம்

தீர்த்தம்

சக்திதீர்த்தம்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

ஆதிவயலூர்

ஊர்

குமாரவயலூர்

மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

 

இப்பகுதியில் வேட்டையாட வந்த சோழ மன்னன் ஒருவர் தண்ணீர் தாகம் எடுத்து நீருக்கு அலைந்து, இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு வரும் போது மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பு ஒன்றைக் கண்டு, அதனை ஒடித்துத் தாகம் தீர்க்க எண்ணி கரும்பை ஒடித்த போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அவ்விடத்தை தோண்டிப்பார்த்த போது சிவலிங்கம் இருந்ததாகவும் பின்னர் கோயில் எழுப்பியதாகவும் கர்ணபரம்பரை செய்தி கூறுகின்றது.

திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் “முத்தைத் திரு” பாடியபின்பு“வயலூருக்கு வா” என்று முருகன் செல்ல அதன்படி அருணகிரியார் இங்கு வந்துள்ளார். இங்குள்ள பொய்யாகணபதிதான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று செல்லப்படுகிறது. இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும் அறிவையும் பெற்றார். இத்தலத்து முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார். அத்தகைய பேரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கிருபானந்த வாரியாரின் தனிப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக உலகப் புகழ் பெற்ற கோயிலாக இன்று இக்கோயில் திகழ்கிறது.

இந்த வயலூரில் குடிகொண்டு இருக்கும் முருகப்பெருமான் ஒரு உண்மையை விளக்குகிறார். முருகப்பெருமான் தந்தையையும் தாயையும் முன்னிறுத்தி, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை நமக்கு புகட்ட,அன்றாடம் தாய் தந்தையர் காலில் பணிந்து பூசனை புரிந்து அருள் பெற்ற பாலகராய் காட்சி தருகிறார்.

சிவன் கோயிலில் முருகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தலம். மூலஸ்தானத்தில் முருகன் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்கு தேவமயில் என்று பெயர். ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள். இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது. ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய்தந்தையரை தனித்து நின்று பூஜை செய்வார். ஆனால் வயலூரில் தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூஜை செய்கின்ற தனிச்சிறப்பு வயலூர் தலத்திற்கு உண்டு. வயலூரில் முருகக் கடவுள் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார். நடராஜர் சூரத்தாண்டவ மூர்த்தியாக உள்ளார். அருணகிரி நாதருக்கு கல்யாண கோலத்தில் குமாரராக காட்சி தந்ததால் தடைபட்ட கல்யாணங்கள் நடைபெறும்.

சிவன் சன்னதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். சுவாமி, மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால்,செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும்.கந்த சஷ்டியின்போது முருகன் தெய்வானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின்போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோயில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாகக் காட்சி தருவர். அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம்.

முருகபக்தரான கிருபானந்த வாரியார், 1934ம் ஆண்டில், இக்கோயிலுக்கு வந்தார். அப்போது அர்ச்சகராக இருந்த ஜம்புநாத சிவாச்சாரியார், அவருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார். இதில் மகிழ்ந்த வாரியார், ஐம்பது பைசாவை அவரிடம் காணிக்கை கொடுத்துச் சென்றார். அன்றிரவில் கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் சந்நியாசி வடிவில் தோன்றிய முருகன், “ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே? அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா?” என்று கேட்டார். வியந்த நிர்வாகி, மறுநாள் கோயிலுக்கு வந்தபோது, வாரியார் ஐம்பது பைசா கொடுத்ததை அறிந்தார். அவருக்கு அந்த காசை திருப்பி அனுப்பி விட்டார். அதன்பின், இங்கு வந்த வாரியார்,நடந்ததை அறிந்து, கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார். எங்கும் நிறைந்த முருகப்பெருமான் வயலூர் தலத்தில் தமக்கு அருள் புரிந்தான் என்று தமிழ் கூறும் நல்லுலகு பூராவிலும் சென்ற நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முழக்கி வந்தவர் வாரியார் சுவாமிகள். வயலூரைப் பற்றி தமிழ் மக்கள் அறியும் படி செய்தவர் வாரியார்.நான் அன்றாடம் வழிபட்டு வரும் வயலூர் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி சொற்பொழிவை தொடங்குகிறேன் என்று முன்னுரை வழங்கிய பின்பே சொற்பொழிவை தொடங்குவார். அந்த அளவு இத்தலத்துக்கும் வாரியாருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு. இத் திருக்கோயில் பெருமளவு புகழ்பெற செய்ததற்கான அத்தனை பெருமையும் வாரியாருக்கே சாரும்.

வழக்கமாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும், கோலத்தில் காட்சி தரும் நடராஜரை, இங்கு காலைத் தூக்காத கோலத்தில் தரிசிக்கலாம். இதை நடனமாடுவதற்கு முந்தைய நிலையாகும். எனவே, இவரது சடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவருக்கு “சதுரதாண்டவ நடராஜர்” என்று பெயர். மார்கழி திருவாதிரைத் திருநாள் இவருக்கு விசேஷமாக நடக்கும்.

அருணகிரிநாதருக்கு காட்சி தந்த “பொய்யா கணபதி” விசேஷமான மூர்த்தியாவார். அருணகிரியார் இவரைப்போற்றி திருப்புகழில் காப்புச்செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ, அந்த அளவிற்கு இவர் பொருளை சீராகக் கொடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இங்கு அருணகிரிநாதருக்கும் சன்னதி உள்ளது. ஆனி மூலத்தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார். சிவனுக்குரிய வன்னி மரம் இத்தலத்தின் விருட்சமாகும். கோயிலுக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

திருவிழா:

வைகாசி விசாகம் – 12 நாட்கள்.

கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்) – 7 நாட்கள். பங்குனி உத்திரம் – 4நாள் திருவிழா.

தைப் பூசம் – 3 நாள்.

கோரிக்கைகள்:

நாக சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருக்குளத்தில் (நாக சர்ப்ப தோஷம்) மூழ்கி முருகனைத் தரிசித்தால் திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும்.

நோய் நீக்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

முடி இறக்கி காது குத்தல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கபிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், எழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருவபர்கள் இறைவனுக்கு செய்யலாம்.

 

மேலதிக தகவல்கள்:

தினமலர்: http://temple.dinamalar.com/New.php?id=723

 

Leave a review

Your email address will not be published. Required fields are marked *